இந்தியாவில் ராஜமெளலியைப் போல் ஹாலிவுட்டில் வரலாற்றுத் திரைப்படங்களை இயக்குவதற்கு புகழ்பெற்றவர் இயக்குநர் ரிட்லீ ஸ்காட். தற்போது அவர் இயக்கியிருக்கும் படம் நெப்போலியன் படத்தின் டிரைலர் இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது. ஆப்பிள் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரித்திருக்கிறது.
ரிட்லீ ஸ்காட்
ரிட்லீ ஸ்காட் என்கிற பெயரை நாம் அதிகம் கேள்விப்படாமல் இருக்கலாம். ஆனால் அவரது படங்களை நாம் நிச்சயம் பார்த்திருப்போம். வாரத்திற்கு ஒரு முறை சன் டீவியில் தமிழில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பட்டப் படங்கள் ரிட்லீ ஸ்காட் இயக்கியவை. உதாரணத்திற்கு க்ளாடியேட்டர், த மார்ஷியன் ஆகியத் திரைப்படங்கள் ரிட்லீ ஸ்காட் இயக்கிய புகழ்பெற்றத் திரைப்படங்கள். இன்று இந்திய மொழியில் சரித்திர திரைப்படங்களை இயக்கும் பல இயக்குநர்களுக்கு ரிட்லீ ஸ்காட் மிகப்பெரிய ஆதர்சமான இயக்குநர்.
நெப்போலியன்
தற்போது ரீட்லி ஸ்காட் இயக்கியிருக்கும் மற்றொரு வரலாற்றுத் திரைப்படம் நெப்போலியன். 18 ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சு நாட்டின் மிகப்பெரிய அரசியல் தலைவர் நெப்போலியனின் வாழ்க்கையை மையப்படுத்திய படமாக உருவாகி இருக்கிறது இந்தப் படம். யாக்கின் ஃபீனிக்ஸ் இந்தப் படத்தில் நெப்போலியன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கடந்த ஜூம் 10 ஆம் தேதி இந்தப் படத்தின் டிரைலர் யூடியூபில் வெளியாகி இருக்கிறது.
டிரைலர் எப்படி?
ஒரு சாதாரண படைத்தளபதியாக இருக்கும் நெப்போலியன் எப்படி ஃபிரான்ஸ் நாட்டின் அரசனாக மாறுகிறான் என்பதைப் பற்றிய மிக பிரம்மாண்டமான படமாக இது இருக்கும் என்பதை இந்த டிரைலரைப் பார்க்கும்போது தெரிகிறது. மிக பிரம்மாண்டமான போர் காட்சிகள் படத்தில் நாம் எதிர்பார்க்கலாம். ஒரு படைத்தளபதியாக பின் ஒரு நாட்டின் அரசனாக பின் உலகத்தை மொத்தமும் கைப்பற்ற நினைக்கும் பேராசைக் கொண்ட ஒரு மனிதன் என நெப்போலியனின் பல்வேறு கட்ட வாழ்க்கை இந்த டிரைலரில் காட்டப்படுகிறது. மொத்தத்தில் ரிட்லீ ஸ்காட்டின் இந்தப் படம் இதுவரை நாம் பார்த்திராத ஒரு அனுபவமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
யாக்கீன் ஃபீனிக்ஸ்
ஜோக்கர் படத்தில் நடித்து ஆஸ்கர் விருதை வென்ற யாக்கீன் ஃபீனிக்ஸ் இந்தப் படத்தில் நெப்போலியனாக நடித்திருக்கிறார். ஜோக்கர் படத்தில் தனது நடிப்பால் உலக திரைப்பட ரசிகர்களைக் கவர்ந்தவர் இந்தப் படத்தில் நெப்போலியனாக நடித்து நம்மை நிச்சயம் மிரளவைப்பார் என்று எதிர்ப்பார்க்கலாம்.