சரிபோதா சனிவாரம்


நானி , எஸ்.ஜே சூர்யா மற்றும் பிரியங்கா மோகன் நடித்து இன்று திரையரங்கில் வெளியாகியிருக்கும் படம் சரிபோதா சனிவாரம் . அபிராமி , அதிதி பாலன் , பி சாய்குமார் , சுபலேகா சுதாகர் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார். விவேக் ஆத்ரேயா இப்படத்தை இயக்கியுள்ளார். தமிழில் இப்படம் சூர்யாஸ் சேட்டர்டே என வெளியாகியுள்ளது. நானியின் 31 ஆவது படமாக 90 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இப்படத்தின் முழு விமர்சனத்தைப் பார்க்கலாம்.


சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் அதிகமாக கோபப்படும் இளைஞனாக வளர்கிறார் சூர்யா(நானி). சூர்யாவின் அம்மா புற்றுநோயால் கொஞ்சம் கொஞ்சமாக இறக்க இருக்கிறார். தான் இறப்பதற்குள் தனது மகன் மற்றும் மகளுக்கு சொல்ல வேண்டிய முக்கியமானவற்றை எல்லாம் சொல்கிறார்.


சூர்யாவிடம் தனது கோபத்தைக் கட்டுபடுத்த அவன் அம்மா ஒரு வழி சொல்கிறார். ஒவ்வொரு முறை தனக்கு கோபம் வரும்போது அதை எல்லாம் வாரத்தில் ஒரு நாள் மட்டும் காட்டவேண்டும். எவ்வளவு கோபம் வந்தாலும் வாரத்தில் ஒரு நாள் மட்டுமே தனது கோபத்தை வெளிகாட்டுவேன் என சூர்யா அவருக்கு சத்தியம் செய்துகொடுக்கிறார். 


வாரம் முழுவதும் அமைதியாக இருந்துவிட்டு தன்னை கோபப்படுத்துபவர்களின் பெயர்களை டைரியில் எழுதிவைத்துக் கொள்வது. சரியாக சனிக்கிழமை ஆனதும் ஒவ்வொருத்தராக தேடித்தேடி போய் அடித்து நொறுக்குவது என ஹீரோ அறிமுகத்துடன் தொடங்குகிறது படம்.


மறுபக்கம் தனது அண்ணனிடம் இருந்து தனக்கு சேர வேண்டிய சொத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்க போராடுகிறார் இன்ஸ்பெக்டர் தயாநந்த்( எஸ்.ஜே.சூர்யா). தனது அண்ணன் மேல் அவருக்கு ஏன் இவ்வளவு இந்த பகை என்பதை எஸ்.ஜே சூர்யாவுக்கே உரிய பாணியில் ஒரு காட்சியில் சொல்லப்படுகிறது.


அரசியல்வாதியான தனது அண்ணன் மீது கோபம் வரும்போதெல்லாம் அப்பாவி மக்களை போட்டு புரட்டிப்போட்டு அடித்து கொடுமை செய்கிறார். அதே போலீஸ் ஸ்டேஷனில் புதிதாக வந்து சேரும் கல்யாணி ( பிரியங்கா மோகன்) தான் சூர்யா சின்ன வயதில் இருந்து காதலித்து வரும் அத்தை மகள். 


கோபத்தை கட்டுப்படுத்த முடியாத இந்த இரண்டு ஆண்கள் நேருக்கு நேர் மோதிக்கொள்வதற்கான சூழல்களை அமைத்து ஆக்‌ஷன் நிறைந்த ஒரு ஃபேமிலி எண்டர்டெயினர் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர்.


சரிபோதா சனிவாரம் பாக்ஸ் ஆபிஸ்






சரிபோதா சனிவாரம் படம் வெளியாகிய முதல் 3 நாட்களில் உலகளவில்  52.18 கோடி வசூலை ஈட்டியுள்ளது