செல்வராகவன்


கடந்த பத்து ஆண்டுகளில் அதிகம் கொண்டாடப்பட்ட இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன். காதல் கொண்டேன் , 7 ஜி ரெயின்போ காலணி , புதுப்பேட்டை உள்ளிட்ட இவரது படங்கள் மிகபெரிய வெற்றிபெற்றன. கார்த்தி நடித்து செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட சிறந்த ஃபேண்டஸி திரைப்படமாக கருதப்படுகிறது.


சமீபத்தில் வெளியான தங்கலான் படத்தில் கூட ஆயிரத்தில் ஒருவன் சாயல் இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்தனர். ஆனால் ஆயிரத்தில் ஒருவன் படம் வெளியானபோது இப்படம் தமிழ் ரசிகர்களால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது . கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தின் தோல்வி குறித்து இயக்குநர் செல்வராகவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார் .


இன்றுவரை அழுதுகொண்டுதான் இருக்கிறேன் 


செல்வராகவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் “நிறையபேர் என்னை எத்தனையோ இடங்களில் ஆயிரத்தில் ஒருவன் படத்தைப் பற்றி பேச சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அந்த படத்தைப் பற்றி எனக்கு பெரிதாக தோன்றவில்லை. அந்த படத்தின் மூலமாக அவ்வளவு காயமும் வலியும் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆயிரத்தில் ஒருவன் படம் தொடங்கியபோது எனக்கு கிடைத்த ஒரு நல்ல விஷயம் என்றால் அந்த படத்திற்கு கிடைத்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என எல்லாரும் தங்கள் உயிரைக் கொடுத்து அந்த படத்திற்காக உழைக்கத் தயாராக இருந்தார்கள்.


நாங்கள் எல்லாரும் சேர்ந்து வேலை செய்தபோதுதான் இது எவ்வளவு பெரிய கடினமான வேலை என்று எங்களுக்குத் தெரிந்தது. பாம்புகள் , தேள்கள் , அட்டைப்பூச்சிகளுக்கு மத்தியில் இந்தப் படத்தை நாங்கள் எடுத்தோம். பாதி படம் எடுத்து முடித்தபோது தான் எனக்கு இந்த பட்ஜெட்டில் இந்த படத்தை எடுத்து முடிக்க முடியாது என்று தெரிந்தது . படத்தின் தயாரிப்பாளரிடம் சென்று நான் உங்களை சிரமப்படுத்த விரும்பவில்லை. அதனால் இதற்குமேல் நானே என்னுடைய பணத்தை போட்டு இந்த படத்தை எடுத்து முடிக்கிறேன் என்று சொன்னேன். ஆனால் இப்படத்தின் தயாரிப்பாளர் ஒரு நல்ல மனம் கொண்டவராக இருந்ததால் மேலும் 5 கோடி படத்திற்கு செலவிடுவதாக அவர் சொன்னார். அந்த பணமும் போதாமல் நான் வட்டிக்கு பணம் வாங்கி இந்தப் படத்தை எடுத்து முடித்தேன்.


இந்த படத்தின் வி.எஃப்.எக்ஸ் வேலைகளுக்காக ராத்திரி பகலாக வேலை செய்தேன். பிரைம் ஃபோகஸ் கம்பேனியின் அலுவலகத்திலேயே தங்கி படத்தின் வேலைகளை செய்து முடித்தேன். படம் வெளியான தருணத்தில் இருந்து ஒவ்வொருத்தராக வந்து படத்தை குத்தி கிழித்தார்கள். இவன் யார் இப்படி படம் எடுப்பதற்கு என்று போஸ்டர் ஒட்டினார்கள். சில காலம் கழித்து படம் தெலுங்குவில் வெளியாகி பயங்கரமான பாராட்டுக்களைப் பெற்றது. எனக்கு எதுவுமே வேண்டாம் ஆனால் இந்தப் படத்தில் வேலை செய்த எத்தனையோ கலைஞர்களுக்கு ஒரு சின்ன அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று இன்று வரை கண்ணீர் சிந்திக் கொண்டு தான் இருக்கிறேன். 






இன்று சோழர்களைப் பற்றி எல்லாரும் படம் எடுக்கிறார்கள். ஆனால் ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு முன்பு வரை சோழர்களைப் பற்றி யார் படமெடுத்தார்கள். பல்வேறு ஆராய்ச்சிகளை செய்துதான் இந்தப் படத்தை எடுத்தேன். இன்று சோழர்களைப் பற்றி படம் எடுக்கிறீர்கள். இந்த முயற்சியை முதல் முறையாக கையிலெடுத்தவர்களை பாராட்டி ஒரு சின்ன நன்றியை தெரிவித்துக் கொள்ளுங்கள். அதுதான் நான் கேட்டுக்கொள்வது“ என்று செல்வராகவன் பேசியுள்ளார்