நடிகர் நானி
‘வெப்பம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகியவர் நானி. பின் ‘ராஜமெளலி’ இயக்கத்தில் வெளியான ‘நான் ஈ’ திரைப்படத்தில் பரவலான அங்கீகாரம் பெற்றார். தொடர்ச்சியாக கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். ஜெர்ஸி, ஜெண்டில்மேன், ஷியாம் சிங்கா ராய் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்த கதாபாத்திரங்கள் கவனம் ஈர்த்தன. நானி நடித்து சமீபத்தில் வெளியாகிய படம் ‘ஹாய் நானா’.
ஹாய் நன்னா
நானி, மிருணாள் தாக்கூர் நடித்துள்ள 'ஹாய் நன்னா' திரைப்படம் கடந்த டிசம்பர் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது. ஷோர்யுவ் இப்படத்தை இயக்கியுள்ளார். நாசர், ஜெயராம், ஸ்ருதி ஹாசன், குழந்தை நட்சத்திரம் கியாரா கன்னா உள்ளிட்டவர்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள். ஹேஷம் அப்துல் வஹப் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வைரா என்டர்டெயின்மெண்ட் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வெளியாகியது.
கதை
தந்தை - மகளுக்கு இடையிலான உறவை மையமாக வைத்து உருவான ‘ஹாய் நன்னா’ திரைப்படம் ரசிகர்களிடையே பாராட்டுக்களைப் பெற்றது. ஃபேஷன் போட்டோகிராஃபராக இருக்கும் விராஜ் (நானி) தனது மகள் மஹிமாவுடன் வாழ்ந்து வருகிறார். ‘65 ரோஸஸ்’ என்கிற ஒரு நுரையீரல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள தன் மகள் மஹிமாவின் மேல் அளவுக்கதிகமான பாசம் வைத்திருக்கும் ஒரு தந்தையாக இருக்கிறார் விராஜ்.
தன் அம்மாவைப் பற்றி கேட்டு வற்புறுத்துகிறார் மஜிமா. விராஜின் மனைவி யார்? தன் மகளை அவர் பிரிந்திருக்கும் காரணம் என்ன? இவர்களின் வாழ்க்கையில் புதிதாக வரும் யஷ்னாவிற்கும் இந்த தந்தை மகளுக்கும் இருக்கும் தொடர்பு என்ன என்பதே ‘ஹாய் நன்னா’ படத்தின் கதை.
சீதா ராமம் படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் தன்னுடைய கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார் மிருணாள் தாக்கூர். ரொமான்ஸ், காமெடி கலந்த ஃபீல் குட் படமாக அமைந்த ஹாய் நன்னா படம் 20 நாட்களுக்கும் மேல் திரையரங்கில் ஓடியதைத் தொடர்ந்து தற்போது ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
ஓடிடி ரிலீஸ்
ஹாய் நன்னா படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் பெற்றுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 4ஆம் தேதி வெளியாக இருக்கிறது ஹாய் நானா.