தொடர்ச்சியாக சர்ச்சையில் பாலகிருஷ்ணா சிக்கி வரும் நிலையில், தெலுங்கு சினிமாவே அவரது மனைவி வசுந்தரா தேவியை அதிர்ஷ்டமானவராக பார்க்கிறது. அதன் பின்னணி என்பதை காணலாம். 


கடந்த சில நாட்களுக்கு முன்பு கிங் ஆஃப் கோதாவரி படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நந்தமுரி பாலகிருஷ்ணா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் மேடையில் நடிகை அஞ்சலியை நகர்ந்து நிற்க சொல்வதற்காக பிடித்து தள்ளிய வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி கடும் விமர்சனங்களை சந்தித்தது. அதேசமயம் பாலகிருஷ்ணா மேடைக்கு கீழே அமர்ந்திருக்கும்போது அவரின் காலுக்கடியில் ஒரு பாட்டிலில் தண்ணீரும், இன்னொரு பாட்டிலில் மதுபானம் போன்ற திரவம் இருந்த வீடியோவும் வைரலானது. 


ஆனால் பாலகிருஷ்ணாவுக்கும் தனக்கும் பல ஆண்டுகால நட்பு இருப்பதாக சொல்லி நடிகை அஞ்சலி இந்த பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைத்தார். இப்படி பாலகிருஷ்ணா சர்ச்சையில் சிக்கி வருகிறார். ஆனால் அவரது மனைவி வசுந்தரா தேவியை தெலுங்கு சினிமாவே அதிர்ஷ்டசாலியாக பார்க்கிறது. 


அதாவது, “ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சராக இருந்த என். டி. ராமராவ் மகனான நந்தமுரி பாலகிருஷ்ணா குழந்தை நட்சத்திரமாக தாத்தம்மா கலா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 63 வயதான அவர் இன்று தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். பாலகிருஷ்ணாவின் மனைவி பெயர் வசுந்தரா தேவி. அவரை அடிக்கடி பாலகிருஷ்ணா பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் காணலாம். அவர் தேர்தலில் போட்டியிட்டபோது வசுந்தரா தேவி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பாலகிருஷ்ணாவை பொறுத்தவரை தனது மனைவியை மிகவும் அதிர்ஷ்டமானவராக கருதுகிறாராம். அவர் மட்டுமல்ல தெலுங்கு சினிமாவே வசுந்தராவை அப்படித்தான் நம்புகிறது. 


பாலகிருஷ்ணாவை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் வசுந்தராவிடம் இருந்து பணம் கொடுத்து பெறுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதேபோல் பாலகிருஷ்ணா வெளியே செல்லும்போது வசுந்தரா தேவி எதிரே வந்து செல்வதை நல்ல சகுணமாக நினைப்பாராம். 1982 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்ட இந்த தம்பதியினருக்கு நரா பிராஹ்மனி, தேஜஸ்வினி நந்தமுரி என்ற இரு மகள்களும், மோக்‌ஷங்கா தேஜா என்ற மகனும் உள்ளனர். விரைவில் மோக்‌ஷங்கா தேஜா ஹீரோவாக அறிமுகமாவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தன் கணவருக்கு ஒன்று என்றால் எங்கிருந்தாலும் உடனே வசுந்தரா வந்து விடுவார். ஒருமுறை தேர்தல் பிரச்சாரத்தில் கடுமையாக டென்ஷன் ஆன பாலகிருஷ்ணா தன் சொந்த கட்சியினரிடம் மிக மோசமாக நடந்து கொண்டார். ஆனால் அன்பின் மிகுதியால் தான் பாலகிருஷ்ணா அப்படி நடந்து கொண்டார் என வசுந்தரா தேவி சொன்னதும் தான் பிரச்சினை முடிவுக்கு வந்ததாம்” என சினிமா வட்டாரத்தில் தகவல் தெரிந்தவர்கள் கூறியிருக்கிறார்கள்.