தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக மக்கள் மனதில் நீங்காத ஒரு வில்லனாக இடம் பிடித்தவர் எம்.என்.நம்பியார். திரையில் வில்லத்தனத்தை காட்டுவதை பார்த்து நிஜத்திலேயே மக்களால் கொடூர வில்லனாக பார்க்கப்பட்ட காட் ஆப் வில்லன்தான் எம்.என். நம்பியார். திரையில் மட்டுமே வில்லனாக இருந்தார் இவர் நிஜத்தில் குழந்தை மனம் கொண்டவர். 


 



எம்.என்.நம்பியார்:


கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர் நாராயணன் நம்பியார். சிறு வயதிலேயே தந்தையை இழந்த இவர் குடும்ப சூழ்நிலை காரணமாக நாடக கம்பெனியில் சேர்ந்தார். பின்னர் 1935ம் ஆண்டு திரைத்துறையில் அடியெடுத்து வைத்தார். அந்த சமயத்தில் ஏராளமான நடிகர்கள் நாராயணன் என பெயரால் இருந்ததால் அவருக்கு எம்.என் நம்பியார் என்ற பெயர் சூட்டப்பட்டது.


பின்னர் அதுவே ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. ஒரு சில திரைப்படங்களில் நாயகனாகவும் நடித்த நம்பியாரை மக்கள் ஏற்றுக்கொள்ளாததால் ஒரு முழுநீள வில்லனானார். பின்னர் வெற்றியின் உச்சத்திற்கு சென்ற நம்பியாரின் மாறுபட்ட குரல் வளம் அவரை மேலும் வேற லெவலுக்கு தூக்கிச் சென்றது. இப்படி தனக்கென ஒரு தனி ஸ்டைலை தக்க வைத்து கொண்ட நம்பியார் பிற்காலங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்தார். நம்பியார் நடித்த கடைசி திரைப்படம் 'சுதேசி'. அதற்கு பின்னர் திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து ஓய்வு பெற்றார். 


நம்பியாரின் பேரன்:


1946ம் ஆண்டு தனது உறவுக்கார பெண் ருக்மணியை பெற்றோர்களின் ஆசைப்படி திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் சினேகலதா மற்றும் சுகுமாரன், மோகன் என இரண்டு மகன்கள் இருந்தனர். அவர்களின் மகன் சுகுமாரன் நம்பியார், கேரள மாநில பாஜக தலைவர்களில் ஒருவராகவும் இருந்தவர். அவர் 2012ம் ஆண்டு மாரடைப்பால் காலமானார். அவரின் மகன் சித்தார்த் சுகுமார் தற்போது வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார். இந்த தகவல் தற்போது திரையுலகத்தினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


நம்பியாரின் சொத்துக்கள் பாகம் பிரிக்கப்பட்ட பிறகு மகன் சுகுமாரன் காலமானதால், சுகுமாரின் மகனும், நம்பியாரின் பேரனுமான சித்தார்த் சுகுமார் சொத்து உரிமையியல் வழக்கு ஒன்றை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளார். மறைந்த நடிகர் நம்பியாரின் புகைப்படங்கள், ஐயப்பன் ஓவியங்கள், அவர் வாங்கிய விருதுகள்  மற்றும் பூஜை பொருட்கள் அனைத்தும் தனது அத்தையான சினேகலதாவின் வசம் உள்ளது. ஒரே குடும்பமாக தனது தாத்தாவுடன் இருக்கும் போது அது பொது பொருள்களாக பயன்படுத்தப்பட்டுள்ளது. தனது அத்தை தனியாக வீட்டில் குடியேறியவுடன் அதை தனக்கு திருப்பி தந்து விடுவதாக ஒப்புக்கொண்டு தற்போது அதை தர மறுப்பதால் அத்தைக்கு எதிராக இந்த வழக்கு தொடர்ந்துள்ளார் நம்பியாரின் பேரன் சித்தார்த் சுகுமாரன்.  


இது குறித்து ஆய்வு செய்ய வழக்கறிஞர், ஆணையர் ஒருவரை நியமிப்பதாக ஐகோர்ட் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. தனி நீதிபதியின் இந்த இடைக்கால உத்தரவை ஏற்க முடியாது என உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார் நம்பியாரின் மகள் சினேகலதா. தந்தை பயன்படுத்திய பொருட்கள் தனக்கு தான் சொந்தம் என்றும் இந்த வழக்கில் தெரிவித்துள்ளார். இந்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த நீதிபதிகளின் குழு இந்த ஆய்வு அறிக்கையை அளிக்க வழக்கறிஞர், ஆணையரை நியமிக்கும் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் புதிய ஆணையர் ஒருவரை நியமித்து அவர்கள் நம்பியாரின் வீட்டில் ஆய்வை மேற்கொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ளது.