தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியனாக, சிறந்த குணச்சித்திர நடிகராக திகழ்ந்த நடிகர் வைகை புயல் வடிவேலு தனது இரண்டாவது இன்னிங்ஸை 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' திரைப்படம் மூலம் தொடங்கியுள்ளார். நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தின் 'அப்பத்தா' பாடல் நேற்று வெளியாகி ரசிகர்களின் ஏகபோக வரவேற்பை பெற்றுள்ளது. பாடல் வெளியான ஒரே நாளில் 5 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்து நொ.1 ட்ரெண்டிங் பாடலாக இருந்து வருகிறது.
கலக்கலான ரீ என்ட்ரி :
2017ம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான "மெர்சல்" திரைப்படத்திற்கு பிறகு சுமார் நான்கு ஆண்டு காலமாக சினிமாவில் தலைகாட்டாமல் இருந்து வந்த நடிகர் வடிவேலு மீண்டும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்து ரசிகர்களை ஒட்டுமொத்தமாக ஆக்கிரமிக்க துவங்கிவிட்டார். இயக்குனர் சுராஜ் இயக்கியுள்ள 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார் சந்தோஷ் நாராயணன். படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள் அந்த நான்கு பாடல்களையுமே நடிகர் வடிவேலு தான் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வடிவேலுவை ஆட வைத்த பிரபுதேவா :
வடிவேலுவின் ரீ என்ட்ரி திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருப்பதால் படத்தின் முதல் பாடலான 'அப்பத்தா' வெளியான உடனேயே வியூஸ் கன்னா பின்னா என எகிற தொடங்கியது. நடிகர் வடிவேலு பாடிய இந்த பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார் பிரபுதேவா. வடிவேலுவுக்கு ஏத்த மாதிரியான காமெடி டான்ஸ் மூவ்ஸ் கொடுத்து வடிவேலுவை கலக்கலாக ஆடவைத்துள்ளார் பிரபு தேவா. இந்த பாடலின் வரிகளை எழுதியுள்ளார் துரை மற்றும் பிக் பாஸ் புகழ் அசல் கோலர்.
ஒரே நாளில் ட்ரெண்டிங் ஆன பாடல் :
வெளியான ஒரே நாளில் 5 மில்லியன் வியூஸ் பெற்று இந்த பாடல்தான் இன்று ட்ரெண்டிங்காக உள்ளது. இந்த பாடலுக்கு கிடைத்த வெற்றியே படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பை எடுத்து காட்டுகிறது. நவம்பர் மாதம் 11ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்த்த இந்த திரைப்படம் சில காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒரு முழுநீள காமெடி திரைப்படத்துக்கு ஆயுத்தமாக ரெடியாகி வருகிறார்கள் ரசிகர்கள். விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.