வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிப்பில் உருவாகியுள்ள  கஸ்டடி படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.


மாநாடு, மன்மத லீலை திரைப்படங்களைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் திரைப்படம்  ‘கஸ்டடி’. தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம் நாக சைதன்யாவின் 22ஆவது படமாகும்.


நடிகை க்ரித்தி ஷெட்டி நாகசைதன்யாவுடன் இந்தப் படத்தில் 2ஆவது முறையாக இணைந்துள்ளார். அரவிந்த் சாமி, சரத் குமார், பிரியாமணி, பிரேம்ஜி, கிஷோர் சம்பத் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.


மாமனிதன் படத்துக்குப் பிறகு இந்தப் படத்துக்கு இளையராஜா - யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர்.  வரும் மே 12ஆம் தேதி இந்தப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள  நிலையில், இன்று இந்தப் படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.


 






காயம்பட்ட மனம் ஒருவரை எந்த எல்லைக்கு எடுத்துச் செல்லும் எனும் வசனத்துடன் தொடங்கி, துரத்தும் சாவிடமிருந்து தப்பி ஓடும் நாகசைதன்யா, அதனைச் சுற்றி நடக்கும் சேஸிங் கதையாக இந்த டீசர் அமைந்து, இணையத்தில் வரவேற்பைப் பெற்று டீசர் லைக்ஸ் அள்ளி வருகிறது.


 ‘எ வெங்கட் பிரபு ஹண்ட்’ என டீசரில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், நாக சைதன்யா முதன்முறையாக இந்தப் படத்துக்காக தானே தமிழில் டப்பிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். 


சென்ற மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், முன்னதாக இசையமைப்பாளர் இளையராஜாவுடன் தான் முதன்முறையாக இணைந்துள்ளது குறித்து நெகிழ்ச்சியுடன் நாகசைதன்யா தன் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.