அண்மையில் சமந்தா- நாகசைதன்யா ஜோடி தங்களது விவாகரத்தை இன்ஸ்டாவில் அறிவித்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. அதுகுறித்து தனது வருத்தத்தைத் தெரிவித்திருந்த நடிகரும் நாகசைதன்யாவின் தந்தையுமான நாகார்ஜூனா இந்த விவாகரத்து அறிவிப்பு துரதிர்ஷ்டவசமானது எனக் குறிப்பிட்டுள்ளார். தெலுங்குத் திரைப்பட உலகில் விவாகரத்துகள் ஒன்றும் புதியதில்லை. ஒவ்வொரு ஸ்டார் குடும்பமும் பல விவாகரத்துகளைச் சந்தித்துள்ளது என்றாலும் அதில் முக்கியமாக கவனிக்கவேண்டியது நாகார்ஜூனா குடும்பத்தின் விவாகரத்துகள்தான். 


 






தெலுங்குத் திரைப்பட உலகின் எவர்க்ரீன் ஸ்டார் ஜோடியாக அறியப்படுபவர்கள் அமலா மற்றும் நாகார்ஜூனா. இருந்தாலும் நாகார்ஜூனாவுக்கு அது முதல் திருமணம் அல்ல. நாகார்ஜூனா மிகப்பெரிய ஸ்டார் ஆவதற்கு முன்பே அக்கினேனி நாகேஸ்வரராவ் தனது மகனை தனது நெருங்கிய நண்பரான தயாரிப்பாளர் ராமாநாயுடுவின் மகள் லட்சுமிக்கு மணம் முடித்துவைத்தார். மகன் நாகசைதன்யா பிறந்ததை அடுத்து இருவரும் விவாகரத்து பெற்றனர். அதற்கு அடுத்த இரண்டு வருடங்கள் கழித்துதான் நாகார்ஜூனா அமலாவை மணந்துகொண்டார். அவர்களுக்கு நடிகர் அகில் பிறந்தார். 






நாகார்ஜூனாவின் மருமகன் நடிகர் சுமந்த் யரலகடா, கோதாவரி, பெல்லி சம்பந்தம், உள்ளிட்ட சூப்பர்ஹிட் படங்களில் நடித்தவர். இவருக்கும் நடிகை கீர்த்தி ரெட்டிக்கும் 2004ல் திருமணம் நடந்தது. ஆனால் இரண்டு வருடம் மட்டுமே நீடித்த இந்த உறவு 2006ல் முடிவுக்கு வந்தது. கீர்த்தி ரெட்டி பிறகு திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டாலும் சுமந்த மற்றொரு திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாகவே இருந்துவருகிறார். 






சுமந்தின் சகோதரி சுப்ரியாவும் திருமணம் ஆனவர் என்றாலும் தனது கணவரைப் பிரிந்து தனியாகவே இருந்து வருகிறார். 


நாகார்ஜூனாவின் மகன் அகிலுக்கு 2016ல் சுப்ரியா என்பவருடன் திருமணம் நிச்சயமானது ஆனால் நிச்சயமான ஒரே வருடத்தில் அது நிறுத்தப்பட்டது. சுப்ரியா வேறு ஒருவரை பிறகு திருமணம் செய்துகொண்டார் என்றாலும் அகில் தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். 


இந்த வரிசையில்தான் தற்போது சமந்தா நாகசைதன்யா திருமணமும் முடிவுக்கு வந்துள்ளது.