நாட்டு நாட்டு பாடலுக்காக ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் கீரவாணிக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பத்மஸ்ரீ விருதினை வழங்கினார்.


ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் ஆகிய பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்தாண்டு 6 பேருக்கு பத்ம விபூஷன் விருதுகளும், 9 பேருக்கு பத்ம பூஷன் விருதுகளும், 91 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் ஏப்ரல் 5 ஆம் தேதி டெல்லியில் நடந்த நிகழ்வில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கினார்.


உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவுக்கு மரணத்திற்குப் பின் பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டிருந்தது. முலாயமின் மகனும் சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் விருதை பெற்றார்.


தமிழ்நாட்டைச் சேர்ந்த திரைப்பட பின்னணி பாடகி வாணி ஜெயராமுக்கு விருது அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் மறைந்துவிட்டதன் காரணமாக அவர்களது உறவினர்களிடம் விருது வழங்கப்பட்டது. 


பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.


கோல்டன் குளோப் ஆஸ்கர், பத்மஸ்ரீ...


இந்தியாவின் பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி சர்வதேச அளவில் பாராட்டுகளையும் அங்கீகாரத்தையும் குவித்த திரைப்படம் 'ஆர்.ஆர்.ஆர்'. கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பான் இந்திய திரைப்படமாக வெளியான ஆர்.ஆர்.ஆர், விமர்சன ரீதியாக பாராட்டுகளை குவித்தது.


ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், அலியா பட், அஜய் தேவ்கன், ஒலிவியா மோரிஸ், ஷ்ரியா சரண், ரே ஸ்டீவன்சன் மற்றும் பலர் நடித்திருந்த இப்படம் வசூல் ரீதியாக பெரும் வெற்றியைப்  பெற்றதோடு விருதுகளையும் குவித்து வருகிறது. 


அந்த வகையில் ஆங்கில மொழி இல்லாத படத்திற்கான பிரிவிலும், சிறந்த பாடல் பிரிவிலும் 'நாட்டு நாட்டு' பாடல் கோல்டன் க்ளோப் விருதை வென்றது. மேலும், 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவின் கீழ் 'நாட்டு நாட்டு' பாடல்ஆஸ்கர் விருது பெற்றது.


ஆஸ்கர் விழா மேடையில் பாடகர்கள் ராகுல் சிப்ளிகுஞ்ச் மற்றும் காலா பைரவா இருவரும் நாட்டு நாட்டு பாடலை பாடி அசத்தினர். ஆஸ்கர் மேடையில் வெளிநாட்டு நடனக்கலைஞர்கள் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனம் ஆடியதை ஹாலிவுட் கலைஞர்கள் உள்பட பலரும் கண்டுகளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


ஆஸ்கர் விருது விழா மேடையில் சிறந்த ஆவண குறும்படத்திற்கு தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆஸ்கர் விருதை வென்றது. முதுமலையில் தாயில்லாமல் தவிக்கும் ரகு உள்பட யானைக்குட்டிகளை பராமரிக்கும் முதுமலை தம்பதிகளான பொம்மன் - பெள்ளி- யானைக்குட்டிகளுக்கான உறவுகள் ஆகியவற்றை மிக அழகாக ஆவணப்படுத்திய அந்த குறும்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்ததை பலரும் கொண்டாடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.