‘நானே வருவேன்’ திரைப்படம் 4 நாட்களில் வசூலித்த விபரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
துள்ளுவது இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களை தொடர்ந்து செல்வராகவன் - தனுஷ் கூட்டணி 5வது முறையாக இணைந்துள்ள படம் “நானே வருவேன்”. கிட்டதட்ட 12 ஆண்டுகளுக்குப் பின் இந்த கூட்டணியுடன் யுவனின் இசையும் இணைந்துள்ளதால் ரசிகர்களுக்கு பட அறிவிப்பு குறித்து வெளியாகும் போதே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ள இந்தப் படத்தின் நாயகியாக இந்துஜா நடித்த நிலையில், படப்பிடிப்பு முடிவடைந்து படம் கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
படம் பார்த்தவர்கள் முதல் பாதி விறுவிறுப்பாக இருக்கிறது என்றும் இராண்டாம் பாதி சுமாராக இருப்பதாகவும் கூறி வருகின்றனர். எப்போதும் தனது படங்களுக்கு எப்போது பிரோமோஷனை பிரமாண்டமாக செய்யும் கலைப்புலி தாணு இந்த படத்திற்கு அந்த அளவிற்கு பெரிதாக பிரோமோஷன் செய்யவில்லை. படம் சார்பாக தான் மட்டுமே தோன்றி நேர்காணல்களில் பேசி வந்தார்.
படம் வெளியானதையடுத்து கடந்த சில நாட்களாக இயக்குநர் செல்வராகவன் படம் குறித்தான ரசிகர்களின் சந்தேகங்களுக்கு நேர்காணல்கள் வழியாக பதிலளித்து வருகிறார். இதனிடையே படம் வெளியான அன்று ‘நானே வருவேன்’ திரைப்படம் 10 கோடி 12 லட்சம் வசூலித்ததாக அறிவிக்கப்பட்டு, இதற்காக மாலையுடன் செல்வராகவனை சந்தித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் தயாரிப்பாளர் தாணு. இந்த நிலையில் நானே வருவேன் திரைப்படம் நான்கு நாட்களில் 30 கோடி வசூலித்து இருப்பதாகவும், இதன் மூலம் நானே வருவேன் திரைப்படம் வெற்றிப்படமாக மாறியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, பொன்னியின் செல்வன்’ படத்திற்கு போட்டியாக ‘நானே வருவேன்’ படத்தை ரிலீஸ் செய்வதாக தகவல் வெளியான நிலையில், அது குறித்து அந்தப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு விளக்கம் அளித்தார்.
இது குறித்து பேசியிருந்த அவர், “பொன்னியின் செல்வன் படத்திற்கு எதிராக ‘நானே வருவேன்’ படம் வெளியிடப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. ஆனால் இதில் அவர்களுக்கும் சரி, எங்களுக்கும் சரி எந்த வித கருத்துவேறுபாடு இல்லை. உதாரணத்துக்கு ஜூன் மாதம் 25 ஆம் தேதி நானும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் சிஇஓ தமிழ்குமரனும் பேசும் போது, இரண்டு பேரும் ஒரே மாதத்தில்தான் வருகிறோம் என்றேன். உடனே அவர் ஏன் என்று கேட்டார்? .. அதற்கு பதிலளித்த நான் ‘அசுரன்’ படத்தை பண்டிகையின் போதுதான் வெளியிட்டேன். அதே போல இதிலும் அந்த 9 நாட்களை நான் விடமாட்டேன் என்று சொன்னேன்” என்று பேசினார்.
நன்றி: Behindwoods