நானே வருவேன் படத்தின் 3 ஆம் பாடல் வெளியாகியுள்ளதை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
துள்ளுவது இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களை தொடர்ந்து செல்வராகவன் - தனுஷ் கூட்டணி 5வது முறையாக இணைந்துள்ள படம் “நானே வருவேன்”. கிட்டதட்ட 12 ஆண்டுகளுக்குப் பின் இந்த கூட்டணியுடன் யுவனின் இசையும் இணைந்துள்ளதால் ரசிகர்களுக்கு பட அறிவிப்பு குறித்து வெளியாகும் போதே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ள இந்தப் படத்தின் நாயகியாக இந்துஜா நடித்து வரும் நிலையில் படப்பிடிப்பு முடிவடைந்து படம் வரும் செப்டம்பர் 29 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த ஜூலை 27 ஆம் தேதி தனுஷின் பிறந்தநாளையொட்டி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதனைத் தொடர்ந்து "வீரா சூரா” என தொடங்கும் முதல் பாடல் செப்டம்பர் 7 ஆம் தேதியும், டீசர் செப்டம்பர் 15 ஆம் தேதியும் வெளியானது. இப்படத்திற்கு தணிக்கைக்குழு யூ/ஏ சான்றிதழ் வழங்கிய நிலையில் நானே வருவேன் படத்தின் 2 ஆம் பாடலான “ரெண்டு ராஜா” கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதி ரிலீசானது.
அதேபோல் நானே வருவேன் படத்திற்கு முதல் காட்சியாக காலை 4 மணி காட்சிகள் இல்லாமல் 8 மணிக்கு தான் முதல் காட்சி திரையிடப்பட உள்ளதாகவும், அது ஏன் என்று தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு என விளக்கமளித்திருந்தார். இந்நிலையில் நானே வருவேன் படம் நாளை ரிலீசாகவுள்ளதால் தியேட்டர்கள் திருவிழா கோலம் பூண்டுள்ளது. இதனை முன்னிட்டு ஆங்காங்கே தனுஷ் ரசிகர் மன்றத்தினர் மக்கள் நலப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் நானே வருவேன் படத்தின் இருந்து 3 ஆம் பாடலாக “பிஞ்சு பிஞ்சு மழை” பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலை யுகபாரதி எழுதியுள்ள நிலையில் சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். படத்தின் தனுஷூக்கும் அவரது குழந்தைக்கும் இடையேயான பாசப்பிணைப்பை உணர்த்தும் பாடலாக இதன் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.