இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி படத்தின் படப்பிடிப்பின்போது, நடிகர் வடிவேலுக்கும் படக்குழுவினருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக வடிவேலு அந்த திரைப்படத்தில் நடிக்க மறுத்து விட்டார்.இதனால், தனக்கு நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக அப்படத்தின் தயாரிப்பாளரான இயக்குநர் ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்தினரிடம் புகார் அளித்தார். 


இதையடுத்து, வைகை புயல் வடிவேல் படங்களில் நடிக்க கூடாது எனவும், புதிய படங்களில் ஒப்பந்தம் செய்ய தடை விதித்தும் தயாரிப்பாளர் அறிக்கை வெளியிட்டது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, இயக்குநர் ஷங்கர் வடிவேல் மீது அளித்த புகாரை வாபஸ் பெறுவதாக தயாரிப்பாளர் சங்கத்தில் தெரிவித்தார்.


அதனை தொடர்ந்து நடிகர் வடிவேலு, இயக்குநர் சுராஜ் இயக்கத்தில், லைகா நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்த புதிய படத்திற்கு ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்ற தலைப்புடன், பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதில், வடிவேலுவின் நகைச்சுவை தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.




இந்தநிலையில், நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடிகர் வடிவேலுடன் நடித்து வரும் பிரபல யூடியூபர் பிரஷாந்த், வடிவேல் குறித்து மனம் திறந்துள்ளார். அதில், நடிகர் வடிவேலு முன்னணி நடிகர் என்று தன்னை ஒருபோதும் அலட்டிக்கொள்வதில்லை. திரைப்பட காட்சி எடுக்கும்போது அவர் சட்டையை கிழித்துக்கொண்டு நடிக்க வேண்டுமென்றாலும், அந்த இடத்திலேயே தன் சட்டையை கிழித்துக்கொள்வார். இதற்காக தனக்கு ஒதுக்கப்பட்ட கேரவனுக்கு செல்ல மாட்டார். 


அவர் நடித்த ஏதோ ஒரு காட்சி சரியாக வரவில்லை என்றால், தன்னைத்தானே திட்டிகொள்வார். ஒரு காட்சி நன்றாக வரவேண்டும் என்று எந்த எல்லைக்கும் செல்வார். அவர் ஒரு நடிப்பு பல்கலைக்கழகம். தான் நடித்தால்போதும் என்று இல்லாமல் சக நடிகர்களுக்கும் நடிப்பை சொல்லித்தருவார் என்று குறிப்பிட்டுள்ளார். 


‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. வருகின்ற மே மாதம் கோடை விடுமுறை காலத்தில் குழந்தைகள் மற்றும் குடும்பங்களை கவரும் வகையில் இந்த இத்திரைப்படம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண