கமலை வைத்து மிஷ்கின் இயக்கவிருந்த படம் ட்ராப் ஆனது ஊரறிந்த கதை தான். ஆனால் உணர்ச்சி பொங்க மிஷ்கின் அதற்கான காரணத்தைக் கூறிய பேட்டியொன்று இப்போது வைரலாகி வருகிறது.




புத்தர் பல் பற்றிய படம்: 


புத்தர் வாழ்ந்த காலத்துக்குப் பிறகு நடப்பது போன்ற கதை. புத்தரின் பல் எப்படி இலங்கை வரை சென்றது என்பதுதான் படத்தின் ஒருவரிக் கதை. அந்தக் கதைப்படி, புத்தரின் மகளே இலங்கைக்கு அந்தப் பல்லை எடுத்துச் செல்ல முற்படுவார். வழியில் நிறைய திருடர்களை சமாளித்து பயணிப்பார். ஆனால் அவரால் இலங்கை துறைமுகத்தை அடைய முடியாமல் போகவே, தெற்கு நோக்கி வருகிறார். தெற்கே இருப்பது பூம்புகார் துறைமுகம். அங்கு அவர் வந்த பின்னர் என்ன நடக்கிறது என்பதுதான் கதை.


அங்கு வரும் புத்தரின் மகள், அந்தப் பல்லை எடுத்துச் செல்ல கமல்ஹாசன் பாதுகாவலராக அமர்த்தப்படுகிறார். கமலோ கதைப்படி இரக்கமற்ற கொள்ளையன். மனிதனுக்கான அடிப்படை பண்புகளே இல்லாத நபர். அந்த நபருக்குத் தண்டனையாக புத்தரின் மகளுடன் இலங்கை வரை புத்தரின் பல்லுக்குப் பாதுகாவலாகச் செல்ல வேண்டும் என்ற பணி தரப்படுகிறது. அவ்வாறு அவர் அந்தப் பல்லைப் பாதுகாக்காவிட்டால் அவருக்குப் பதிலாக பிணையாகப் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் அவரது குடும்பத்தினர் கொல்லப்படுவார்கள் என்று கெடு விதிக்கப்படுக்கிறது. கமல் என்ன செய்கிறார் என்பதே மீதிக் கதை. 


ஆனால் இந்தப் படம் ஆரம்ப நிலையிலேயே நின்று போனது.


நின்று போனது ஏன்?


படம் நின்று போனது ஏன் என்று மிஷ்கின் அளித்தப் பேட்டி ஒன்றில், "நான் நந்தலாலா முடித்தவுடன் கமல் அழைத்தார். நாம் ஒரு படம் செய்ய வேண்டும் என்றார். இருவரும் பேசினோம். மூன்று கதைகளை ஆலோசித்தோம். மூன்றாவதாக சொல்லப்பட்ட புத்தர் கதை பிடித்திருந்தது. அதில் உடன்பட்டோம். எனக்கு ரூ.3 கோடி சம்பளம் பேசப்பட்டு முன்பணமும் கொடுத்துவிட்டார்கள். படத்தின் ஆரம்பகாலப் பணிகள் சென்ற போதே எனக்கும் கமலுக்கும் ஒரு விஷயத்தில் உடன்பாடு எட்டவில்லை. அதனால் நான் முன்பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு படத்திலிருந்து விலகினேன். பெரிய சம்பளம், சிவாஜிக்கு அப்புறம் பெரிய நடிகர், இளையராஜா இசை என நிறைய இருந்தும் நான் படத்தைக் கைவிட்டேன். ஆனால், அந்த ஒரு புள்ளியை மட்டும் என்னால் இன்னும் பொதுவெளியில் வெளிப்படையாகச் சொல்ல முடியவில்லை.




வாழ்க்கையில் பல விஷயங்களை நன்கு யோசித்தே முடிவெடுக்க வேண்டும். ஆனால் சில விஷயங்களை யோசிக்காமல் எடுத்துவிட வேண்டும். அப்படித்தான் நான் அந்த முடிவை எடுத்து படத்திலிருந்து விலகினேன். ஒருவேளை நான் அந்தப் படத்தை செய்திருந்தால் எனக்கு மிகப்பெரிய அடையாளம் கிடைத்திருக்கலாம், இன்று நிறைய சம்பாதிக்கும் இயக்குநராக இருந்திருக்கலாம். ஆனால் இன்று போல் சந்தோஷமாக இருந்திருக்க முடியாது. கமல்ஹாசனின் நிழலுக்குள் நான் இருந்திருப்பேன்.


இல்லையேல் அந்தப் படத்தை எனக்கு அப்போது இருந்த குறைந்த அனுபவத்தால் ஒரு அமெச்சூர் படமாகக் கூட உருவாக்கியிருப்பேன். அதனால் அதிகம் யோசிக்காமல் அன்று நான் எடுத்த முடிவு சரியானதே. என்னுடைய வாழ்க்கை நேர்த்தியாக அந்த முடிவே காரணம். நான் இதயப்பூர்வமாக எடுத்த அந்த முடிவு சரியானது என்பதை நான் ஆணவமாகச் சொல்லவில்லை உணர்ந்து சொல்கிறேன். இன்று நான் 10க்கும் மேற்பட்ட படங்களைப் பண்ணி நீடித்த நிலையான வளர்ச்சியை அடைந்து கொண்டிருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.