தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநருள் ஒருவராக இருப்பவர் மிஷ்கின். இவரது இயக்கத்தில் விரைவில் பிசாசு படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது. மாறுபட்ட கதைக்களத்துடன் ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி, பூர்ணா உள்ளிட்டவர்களின் நடிப்பில் இப்படம் உருவாகியுள்ளது. படத்தின் பாடல் ஒன்று சமீபத்தில் வெளியான நிலையில் டிரைலர் மற்றும் வெளியீட்டு தேதி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் John Krasinski இயக்கத்தில் வெளியான A Quiet Place Part II திரைப்படத்தை பார்த்த மிஷ்கின் அந்த படத்தை புகழ்ந்து தள்ளியுள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு A Quiet Place என்னும் ஹாரர் திரைப்படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதன் தொடர்ச்சியாக வெளியான இரண்டாம் பாகத்தை தனது குழுவினருடன் பார்த்த மிஷ்கின் , இயக்குநரை வெகுவாக பாராட்டியுள்ளார்.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட மிஷ்கின் “இன்று இரவு ஆங்கிலத் திரைப்படம் quiet place - 2வை எனது பிசாசு குழுவினருடன் பார்த்து வியந்தேன். இரண்டு வருடத்திற்கு முன்பு இந்த திரைப்படத்தின் முதல் பாகத்தைப் பார்த்து வியந்திருந்தேன். இரண்டாவது பாகம் வருகிறது என்று அறிவித்த பொழுது முதல் பாகம் அளவிற்குச் சுவராசியமாய் இருக்காது என நினைத்தேன்.ஆனால் இன்று பார்த்தவுடன் எனது கணிப்பு தவறானதென உணர்ந்தேன்.quiet place - 2 நூறு சதவீதம் சுவராசியமாய் இருந்தது.என்னோடு படம் பார்த்த அனைவரும் இருக்கையின் நுனியிலிருந்து பதட்டத்துடன் பார்த்து ரசித்தனர். திரைப்படத்தின் இயக்குநரும், எழுத்தாளருமான ஜான் கிரஸ்ன்ஸ்கி இந்த பத்து வருடத்தில் ஹாலிவுட் சினிமா கண்டு பிடித்த திறமையான படைப்பாளி. வேற்றுக்கிரக வாசிகள் மனித சமூகத்தை வேட்டையாடுவது தான் கதை.இந்த தெலிதான கருவை எடுத்துக் கொண்டு, திரைக்கதையில் மாயம் செய்திருக்கிறார். தாயும் மூன்று குழந்தைகளும் கொண்ட ஒரு குடும்பம்,அதிலும் ஒரு கைக்குழந்தையை வைத்துக் கொண்டு எப்படி வேற்றுக்கிரக வாசிகளைப் போராடி வெல்கிறார்கள் என்பதை ஓர் அறுவை சிகிச்சை நிபுணரின் துல்லியத்தோடு கையாண்டிருக்கிறார் இயக்குநர்.தாயாக நடிக்கும் எமிலி பிளெண்ட் மிக நேர்த்தியாக தன் கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார். இரண்டு குழந்தைகளும் தங்கள் பொறுப்பை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். நடிகர் கிலியன் மர்பியும் தனது பாத்திரத்தைச் செம்மையாகச் செய்திருக்கிறார். இதன் இசையமைப்பாளர் மார்கோ பெல்டிரமியின் இசை உள்ளத்தை வருடுகிறது. கூட்டுகிறது, இத் திரைப்படம் ஓர் உணர்ச்சி குவியல்.இந்த திரில்லர் திரைப்படத்தைத் திரையரங்கில் வந்து பார்க்கும் பொழுதுதான் இதன் தொழில் நுட்பத்தையும்,பிரமாண்டத்தையும் உணர்வீர்கள். இந்த கோவிட் வீடடங்கு காலத்தில் நமக்கு quiet place -2 ஒரு திருவிழா தான். ரசிகர்களே திரையரங்கத்திற்கு வந்து இந்த திரைப்படத்தைப் பாருங்கள்.நாமும் வேற்றுக்கிரக வாசிகளுடன் யுத்தம்செய்யலாம்.அன்புடன் மிஷ்கின் “ என தெரிவித்துள்ளார்.