தமிழ் திரையுலகின் பிரபலமான இயக்குனர் மிஷ்கின். இவர் தற்போது தொலைக்காட்சிகளிலும் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியிலும் நடுவராக பங்கேற்று வருகிறார். மிஷ்கின் இயக்குனர், நடிகராக மட்டுமின்றி நல்ல பாடகரும் ஆவார். 

Continues below advertisement

இளையராஜாவை புகழ்ந்து பேசுவது ஏன்?

இவர் இசையமைப்பாளர் இளையராஜாவை புகழ்ந்து பல மேடைகளில் பேசியுள்ளார்.  இளையராஜாவை புகழ்ந்து பேசுவது ஏன்? என்று மிஷ்கின் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். அதில் அவர் பேசியதாவது, 

என்னைப் பற்றி நிறைய வரும் புகார் இளையராஜாவைப் பற்றி உயர்த்திப் பிடித்து பேசுகிறீர்களே? என்று கேட்கிறார்கள். இளையராஜாவிடம் சண்டையிட்டு வந்துள்ளேன். இன்னும் அவரைச் சென்று பார்க்கவில்லை. மிகவும் உரிமையோடு சொல்கிறேன். சண்டையிட்டு இனி அவரை பார்க்கக்கூடாது என்று நினைத்து வந்தவன். அவ்வளவு கோபமாக வந்தேன். 

Continues below advertisement

ஆன்மா சுத்தம் அடையும்:

அது எனது அப்பா. இசைஞானியாக வாழ்நாள் முழுவதும் அவரை வேண்டிக்கிட்டே இருப்பேன். என் நாட்டில் என் வீட்டில் என் தாயின் வயிற்றில் பிறந்த ஒரு மகா கலைஞனை நான் எப்போதும், அந்த இறைவன் கொடுத்த பிச்சை இருக்கிறதே அது அவ்வளவு பெரிய பிச்சை. அதனால்தான் அந்த மனிதனைப் பற்றி எப்போதும் உயர்வாக பேசுகிறேன். அந்த மனிதனை வேண்டி நான் பேசுவது மூலமாக என் ஆன்மா சுத்தமடையும். 

இவ்வாறு அவர் பேசினார்.

இளையராஜா ரசிகர்:

மிஷ்கின் தீவிரமான இளையராஜா ரசிகர் ஆவார். சித்திரம் பேசுதடி படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான மிஷ்கின் அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், சைகோ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். 

தற்போது ட்ரெயின் படத்தை இயக்கி வருகிறார். பிசாசு 2 படம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. மிஷ்கின் இயக்கிய நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சைகோ படங்களுக்கு இளையராஜா இசைமையத்துள்ளார். அப்போது, இளையராஜாவுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு மிஷ்கினுக்கு கிடைத்தது. 

நடிப்பில் மும்முரம்:

மேலும், பல மேடைகளில் இளையராஜாவின் பாடல்களை பாடியும் ரசிகர்களை ஆச்சரியப்படவும் வைத்துள்ளார் மிஷ்கின். தற்போது படங்கள் இயக்குவதை குறைத்து தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் மிஷ்கின். நந்தலாலா படத்தில் கதாநாயகனாக அறிமுகமான மிஷ்கின் பல படங்களில் துணை கதாபாத்திரங்கள், குணச்சித்திர கதாபாத்திரங்கள், வில்லன் வேடங்களில் நடித்து வருகிறார். விஜய், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, விக்ராந்த், ஜிவி பிரகாஷ், பிரதீப் ரங்கநாதன் என பலருடனும் நடித்துள்ளார்.

இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியின்போது உடனிருந்த இளையராஜாவின் தம்பியும், இயக்குனரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் மிஷ்கினை முத்தமிட்டு தனது நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.