பழைய ஓய்வூதியத்தினை முழுமையாகப் பெறுவதற்கும் ஏனைய 9 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான இயக்க நடவடிக்கைகள் தொடரும் எனவும் 3 இலட்சத்திற்கும் மேலுள்ள சத்துணவுப் பணியாளர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை மீட்டெடுக்கவும் களத்தில் நிற்போம் என்று ஜாக்டோ ஜியோ சூளுரைத்துள்ளது. 

Continues below advertisement

தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டிலுள்ள ஒட்டுமொத்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்-அரசு பணியாளர்கள் மனம் மகிழும் வகையில் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட (TAPS) ஓய்வூதியத் திட்டத்தினை அறிவித்தார். இந்த  நடவடிக்கை அடிப்படையில் ஜாக்டோ ஜியோ 6.1.2026 முதல் மேற்கொள்ளவிருந்த காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

அதே நேரத்தில் முதலமைச்சரின் தமிழ்நாடு உறுதியளிப்பு ஓய்வூதியத் திட்ட அறிவிப்பிற்குப் பிறகான சந்திப்பில் அமைச்சர் பெருமக்களிடம் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இருந்து விடுபட்ட அம்சங்களை விரைந்து சீர்செய்து நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை ஜாக்டோ ஜியோ சார்பாக வைக்கப்பட்டது. அமைச்சர்கள் முதலமைச்சரிடம் கலந்து நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி ஆலோசித்து அளித்துள்ளார்கள்.

Continues below advertisement

பேச்சிற்கே இடமில்லை

ஜாக்டோ ஜியோவினைப் பொறுத்த வரையில், ஓய்வூதியத்தினை மீட்டெடுக்கும் இயக்க நடவடிக்கைகளை இத்தோடு நிறுத்தி வைக்கிறோம் என்ற பேச்சிற்கே இடமில்லை. தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் உரிய முறையில் கொண்டு சென்று, அறிவிக்கப்பட்டுள்ள உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தினை 1.1.2026 முதல் நடைமுறைப்படுத்துவதற்கான அரசாணையினை வெளியிடுவதற்கும் 10 சதவிகித மாதாந்திர பங்களிப்பினை முற்றிலுமாக கைவிடுவதற்கும் பணி ஓய்வு பெறும் வரை பணியாளர்கள் சார்பாக பிடித்தம் செய்த பங்களிப்புத் தொகையினை பணி ஓய்வின் போது வட்டியுடன் திரும்ப வழங்குவதற்கும் முழு ஓய்வூதியம் வழங்குவதற்கான காலத்தினை 25 ஆண்டுகளாக நிர்ணயம் செய்வதற்கும் ஏனைய 9 அம்சக் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றுவதற்கான இயக்க நடவடிக்கைளை ஜாக்டோ ஜியோ மேற்கொள்ளும்.

ஜாக்டோ ஜியோ முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பரசு  வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டபடி முதல் வெற்றியை முழு வெற்றியாக மாற்றுவோம் என்பதை நினைவு கூர்கிறோம்.

முன்களப் போராளிகளால் சாத்தியம்

ஓய்வூதியத்திற்கான இந்த வெற்றி என்பது 2017 முதல் கடந்த ஒன்பது ஆண்டுகளாக நாம் அனைவரும் நமது ஒற்றுமை என்ற பதாகையினை உயர்த்திப் பிடித்து, நமக்குள் கருத்து மோதல்கள் பல இருந்தாலும், அதை எல்லாம் புறந்தள்ளிவிட்டு, களத்தில் முன்களப் போராளிகளால் நின்று சாத்தியமாக்கி உள்ளோம் என்பதை மிகுந்த மகிழ்ச்சியோடும் மன நிறைவோடும் ஜாக்டோ ஜியோ பதிவு செய்கிறது. மேலும், மாநில மையத்தில் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் எடுக்கும் முடிவுகளுக்கு ஜாக்டோ ஜியோ மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் ஒப்புதல் வழங்கியதற்கும் ஜாக்டோ ஜியோ மாநில மையத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எந்த போராட்ட முடிவுகளை எடுத்தாலும், களத்தில் நின்று, திக்கெட்டும் சிட்டாய்ப் பறந்து உறுப்பினர்களைச் சந்தித்து, இயக்க நடவடிக்கைகளை எடுத்துரைத்து, போராட்டமே நமது கோரிக்கைகளுக்கான தீர்வு என்பதனை கொண்டு சென்ற இலக்கை நோக்கிய நமது பயணத்திற்கு வித்திட்ட ஜாக்டோ ஜியோ மாவட்ட, வட்டப் பொறுப்பாளர்களுக்கு இதயம் நிறைந்த வாழ்த்துகளை உரித்தாக்குகிறோம் என்று ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.