மிஸ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைகின்றன.


 


துப்பறிவாளன்


விஷால் , பிரசன்னா, அனு இமானுவேல், ஆண்ட்ரியா, சிம்ரன், வினய் உள்ளிட்டவர்கள் நடித்து மிஸ்கின் இயக்கியத் திரைப்படம் துப்பறிவாளன். ஆங்கிலத்தில் புகழ்பெற்ற கற்பனைக் கதாபாத்திரமான ஷெலாக் ஹோல்ம்ஸ் கதாபாத்திரத்தை மையமாக வைத்து மிஸ்கின் துப்பறிவாளன் படத்தை இயக்கினார். என்ன ஒரே வித்தியாசம் என்றால் தனது கதாபாத்திரத்திற்கு கணியண் பூங்குன்றனார் என்று பெயர் வைத்திப்பது தான்.


பொதுவாகவே மிஸ்கின் படங்கள் என்றால் ஒரு குறிப்பிட்ட ரசிகர்களுக்கு மட்டுமான படங்கள் என்கிற நம்பிக்கையை இந்தப் படத்தின் மூலம் மாற்றி காட்டினார் இயக்குநர் மிஸ்கின். தன்னுடைய தனித்துவமான திரைமொழியில் அதே நேரத்தில் மக்கள் ரசிக்கும் வகையிலான விறுவிறுப்பான ஒரு படமாக துப்பறிவாளம் படம் அமைந்தது.


கதை


தனது துப்பறியும்  திறமையின் மேல் அதீதமான நம்பிக்கைக் கொண்ட கணியன் பூங்குன்றன் சில காலமாக தனக்கு சவால் விடும் வகையிலான எந்த கேசும் இல்லாமல் இருக்கிறார். இப்படியான சூழ்நிலையில் தனது நாய்குட்டியை கொன்றதாக ஒருவனைப் பற்றி விசாரணை செய்ய கேட்டுக்கொண்டு ஒரு சிறுவன் வருகிறார். அதே சமயத்தில் மர்மமான முறையில் நடக்கும் சில கொலைகளுக்கும் இந்த நாய்க்குட்டிக்கும் ஒரு தொடர்பு இருப்பதை கண்டுபிடிக்கிறார் கணியன். முக்கியமான குற்றவாளி யார். அவன் இதை எல்லாம் ஏன் செய்கிறான் என்பதை அடுத்த அடுத்தக் காட்சிகளில் முடிச்சு அவிழ்ப்பதைப் போன்ற சுவாரஸ்யத்துடன் எடுத்துச் செல்கிறது படம்.


தான் நடித்த மற்றப் படங்களைக் காட்டிலும் வித்தியாசமான தோற்றத்தில் கூலான ஒரு கதாபாத்திரமாக விஷால் இந்தப் படத்தில் நடித்திருந்தார். அதே நேரத்தில் கணியனுக்கு நண்பனாக மனோ கதாபாத்திரத்தில் நடித்திருந்த பிரசன்னா எந்த வித சாயலும் இல்லாமல் தனது கதாபாத்திரத்தை ஒளிர வைத்திருப்பார். கதாநாயகியாக வரும் அனு இமானுவேலுக்கு சின்ன கதாபாத்திரம் என்றாலும் மிஸ்கினுக்கே உரித்தான ஒரு மாறுபட்ட ஒரு கேரக்டராக இருந்தது. பாக்கியராஜ், சிம்ரன், உள்ளிட்டவர்கள் படத்தில் நடித்திருந்தாலும் அவர்களின் கதாபாத்திரங்கள் காட்சிகளை நகர்த்த மட்டுமே உதவின என்பதை தவிர்த்து மனதில் நிற்கும் படியாக இல்லாதது ஒரு குறையே.