தமிழ் சினிமாவில் இயக்குநராக இருந்து நடிகரான ஏராளமானவர்களை கடந்து வந்துள்ளோம். அந்த வகையில் மிகவும் வித்தியாசமான ஒரு மனிதர்தான் பாண்டியராஜன். 1985-ஆம் ஆண்டு வெளியான 'கன்னி ராசி' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார் பாண்டியராஜன். அவர் இயக்கிய அடுத்த படமான 'ஆண் பாவம்' திரைப்படம் மூலம் நடிகராகவும் பரிணாமம் எடுத்தார்.


நடிக்க துவங்கிய முதல் படத்திலேயே யாருடா இவன் என ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தவர். பாண்டியராஜனின் குறுகுறு பார்வையும், நகைச்சுவையான பேச்சும் ரசிகர்களை உடனே கவர்ந்தது. 



அஞ்சாதே வில்லன் : 


நடிகர் பாண்டியராஜன் தொடர்ந்து ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்து வந்தார். தன்னம்பிக்கையோடு தனது பயணத்தை தொடர்ந்தார். ஒரு காலகட்டத்திற்கு பிறகு குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். ஆனால் முதல் முறையாக ஒரு படத்தில் அவர் வில்லனாக நடித்தார் என்றால் அது இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான 'அஞ்சாதே' திரைப்படத்தில்தான். 


இயக்குநர் மிஷ்கின் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் 'அஞ்சாதே' படத்தில் நடிகர் பாண்டியராஜன் உடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து பகிர்ந்து இருந்தார். "இந்த படத்தில் நீங்க வில்லன் கேரக்டர் பண்ணப் போறீங்க என சொன்னதும், என்னை எல்லாம் எப்படியா வில்லனா ஏத்துப்பாங்க?  என பாண்டியராஜன் கேட்டார். நிச்சயம் ஏத்துப்பாங்க என சொல்லி அவரை சமாதானம் செய்தேன். 



மிஷ்கின் போட்ட கண்டிஷன் : 


இந்த படத்திற்காக நீங்கள் மீசையை எடுக்க வேண்டும் என நான் சொன்னதும் ஷாக்கான அவர் அதெல்லாம் முடியாது போடா... நான் 17 வயசில் இருந்து இந்த மீசையை வைச்சுக்கிட்டு இருக்கேன்/. அதெல்லாம் எடுக்க முடியாது என சொல்லிட்டார். பிறகு அவரை  எப்படியோ சமாளிச்சு ஒத்துக்க வைச்சேன். ஆனா அந்த படத்தின் ஷூட்டிங் முடியும் வரைக்கும் என்னை முறைச்சுகிட்டேதான் இருந்தார்.  


கடைசி நாள் ஷூட்டிங் சமயத்தில் கழுத்தை உடைப்பதுபோல ஒரு சீன் எடுக்கணும்னு அவர் கிட்ட போய் சொன்னதும், என்னை திரும்பி பார்த்து முறைச்சுட்டு போனவர்தான். இந்த படத்துல ஏண்டா நடிக்க ஒத்துக்கிட்டோம் என நினைக்குற அளவுக்கு இருந்துது அவரோட ரியாக்ஷன்.


பிறகு 'அஞ்சாதே' படம் வெளியாகி சரியான ஹிட் அடித்தது. மூன்றாவது நாள் அவர் என்னோட ஆபிஸுக்கு வந்து மோதிரம் போட்டார். அப்புறமா என்ன மிஷ்கின்? இது எப்படி நடந்துது? எனக்கு தெரியாது மிஷ்கின் என சொன்னாரு... இந்த படம் எப்படி வெற்றி அடைஞ்சுதுன்னு எனக்கும் தெரியாது சார் என நான் சொல்லி சிரித்து விட்டேன்" என்றார் மிஷ்கின். 


அஞ்சாதே திரைப்படத்தில் நடிகர் பாண்டியராஜனின் வித்தியாசமான வில்லத்தனத்துக்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். அது அவரது திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான படமாக அமைந்தது