தன்னுடைய அடுத்தப்படமும் அஜித், எச்.வினோத் உடன்தான் என்று தயாரிப்பாளர் போனி கபூர் கூறியுள்ளார்.


போனி கபூர், எச்.வினோத், அஜித் ஆகியோர் முதல்முறையாக  ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் மூலம் கூட்டணி அமைத்தனர். இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும்போதே, இவர்கள் கூட்டணியில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. பாலிவுட்டின் ரீமேக்கான  ‘பிங்க்’ படம், நேர்கொண்ட பார்வை என்று தமிழில் வெளியாகி வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து, இதே கூட்டணியில்,  ‘வலிமை’ திரைப்படம் உருவானது. இந்தப் படத்தின் பணிகள் 2019ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்ட நிலையில், கொரோனா, ஊரடங்கு பல்வேறு இன்னல்களால் படப்பிடிப்புகள் தடைப்பட்டு வந்தது. அனைத்து பிரச்னைகளும் தீர்ந்து படப்பிடிப்பு முடிவடைந்தது. வலிமை(Valimai) படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்புக்காக ரஷ்யா சென்ற படக்குழு, முழு படப்பிடிப்பையும் செப்டம்பர் 3ஆம் தேதி முடித்தது.




இதனிடையே, படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. விக்னேஷ் சிவன் எழுதியிருந்த  ‘நாங்க வேற மாறி’  பாடலை யுவன்ஷங்கர் ராஜா மற்றும் அனுராக் குல்கர்னி ஆகியோர் சேர்ந்து பாடியுள்ளார்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித் தத்துவப் பாடலாக இது இடம்பெற்றது.


படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ‘வலிமை’ பொங்கலுக்கு வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். போனிகபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பில், 2022ம் ஆண்டு பொங்கலுக்கு வலிமை திரைப்படம் வெளியாகும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று பதிவிட்டிருந்தார். போனி கபூரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அஜித்குமாரின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர். வலிமை திரைப்படத்தில் அஜித்துடன், கார்த்திகேயா, ஹுமா குரேஷி, சுமித்ரா, மற்றும் ராஜ் அய்யப்பா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். 






 


‘வலிமை’ படத்தின் ஷூட்டிங்போதே,  போனி கபூர், ஹெச்.வினோத், அஜித் கூட்டணி மூன்றாவது முறையாக கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், அந்த தகவலை போனி கபூர் உறுதி செய்துள்ளார். தனது அடுத்தப்படமும் மீண்டும் அஜித், எச்.வினோத் உடன்தான் என்று தி இந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியின்போது போனி கபூர் கூறினார். இது அஜித்தின் 61ஆவது படமாக இருக்குமா என்று அறிவிப்பு வந்தவுடன் தெரியும்.