இயக்குநர் பொன் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கொம்பு சீவி' திரைப்படத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் விஜயகாந்த், தார்னிகா, காளி வெங்கட் ,முனீஸ்காந்த், ஜார்ஜ் மரியான், சுஜித் சங்கர், கல்கி ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கிராமிய பின்னணியிலான ஆக்ஷன் வித் காமெடி எண்டர்டெயினராக தயாராகி இருக்கும் இப்படத்தை ஸ்டார் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் முகேஷ்.T.செல்லையா தயாரித்திருக்கிறார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். 

கொம்புசீவி படத்தின் இசை வெளியீடு

வரும் 19ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த், எல். கே. சுதீஷ், விஜய பிரபாகரன், இயக்குநர்கள் எஸ். ஏ. சந்திரசேகரன், எம். ராஜேஷ், மித்ரன் ஆர். ஜவகர், நடிகர் ரியோ, நாயகர்கள் சரத்குமார் - சண்முக பாண்டியன் விஜயகாந்த், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம், கலை இயக்குநர் சரவணன் அபிராமன், படத்தொகுப்பாளர் தினேஷ் பொன்ராஜ், நடிகர் கல்கி ராஜா, தயாரிப்பாளர் முகேஷ்.T.செல்லையா, இயக்குநர் பொன்ராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

விஜய்காந்த் படத்திற்காக முதல் விமான பயணம் செய்த சினேகன்

பாடலாசிரியர் சினேகன் பேசுகையில் ''இந்த மேடை என் மனதிற்கு நெருக்கமான மேடை. நிகழ்வு தொடங்கிய தருணத்திலிருந்து இதுவரை பாசத்தின் குழுமமாகத்தான் இங்கு அனைவரும் வந்திருக்கிறார்கள். இதற்காக வாய்ப்பளித்த இயக்குநர் பொன்ராமிற்கு நன்றி. இயக்குநர்கள் பொன்ராம் மற்றும் ராஜேஷ் ஆகியோர் எஸ். ஏ  சந்திரசேகரின் உதவியாளர்களாக பணியாற்றும் தருணத்திலேயே என்னுடைய நண்பர்கள். ஆனால் நான் அவர்களுடைய எந்த படத்திலும் நான் பாடல் எழுதவில்லை. கொம்பு சீவி படத்தை இயக்கப் போகிறார் என்று கேள்விப்பட்டதும் இயக்குநர் பொன்ராமை சந்தித்து இந்த படத்தில் என்னுடைய பங்களிப்பு இருக்க வேண்டும் என உரிமையுடன் கேட்டேன். ஏனெனில் கேப்டன் மீது வைத்திருக்கும் நட்பின் காரணமாகவே கேட்டேன்.‌
 
பாடல் எழுதுவதற்கான வாய்ப்பு கிடைத்தவுடன் நான் 'ராஜ்ஜியம்' படத்தில் 'தமிழன் தமிழன்..' என்பது போன்ற பாடல் எழுதுவதற்கான சூழல் போன்று தான் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் சண்முக பாண்டியன் நடிக்கும் இந்த படத்தில் கமர்ஷியல் பாடலை எழுதுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும் கேப்டனுக்கு எழுதியது போல் அசைக்க முடியாத பாடல் ஒன்றை சண்முக பாண்டியனுக்காக விரைவில் எழுதுவேன். இதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.'பருத்திவீரன்' படத்தில் எல்லா பாடல்களையும் நான் தான் எழுதினேன். இதுபோன்ற கிராமியத்தை நினைவுபடுத்தும் படத்திற்கு பாடல் எழுத வாய்ப்பளித்த யுவனுக்கும்,  இயக்குநருக்கும் நன்றி.‌
எங்கள் வீட்டு பிள்ளை சண்முக பாண்டியனுக்கு மிகப்பெரிய அளவில் படத்தை தயாரித்து வெளியிடும் தயாரிப்பாளர் முகேஷ் செல்லையாவிற்கு ஒட்டுமொத்த திரையுலகமும் வாழ்த்து தெரிவிக்க வேண்டும். அவர் கேப்டன் மீது வைத்திருக்கும் அன்பின் காரணமாகவே இது நடைபெற்றது. இதற்காகவும் இந்த படம் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.
 
கேப்டனுடன் ஆறு, ஏழு படங்களில் பணியாற்றி இருக்கிறேன். என்னுடைய வாழ்க்கையில் முதன் முதலாக கேப்டன் நடிப்பில் உருவான 'வாஞ்சிநாதன்' படத்திற்கு பாடல் எழுதுவதற்காக தான் சென்னையில் இருந்து மும்பைக்கு விமான பயணம் மேற்கொண்டேன். அது மறக்க முடியாது. அவரைப் பற்றிய நினைவுகள் ஏராளம்.‌ அதைப் பற்றி பேசிக் கொண்டே இருக்கலாம். அந்த வகையில் சண்முக பாண்டியன் திரையுலகில் வளர்ந்தால் நாங்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைவோம். கேப்டனுக்கு திருப்பி செலுத்த வேண்டிய அன்பை உங்கள் மீது செலுத்துவோம். அதற்கான களமும், காலமும் வருவதற்காக காத்திருக்கிறோம். நீங்கள் அன்பால் உருவான குழந்தை. அன்பு ஒருபோதும் தோற்பதில்லை. அன்பு வெல்லும். சண்முக பாண்டியன் நடிப்பில் உருவான கொம்பு சீவியும் வெல்லும் என நம்புகிறேன், வாழ்த்துகள்,'' என்றார்.