2025-2026-ஆம் கல்வியாண்டிற்கான பிளஸ் 1 Arrear மாணவர்களின் பெயர்ப்பட்டியலை பதிவிறக்கம் செய்யவும், மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு மற்றும் பிளஸ் 1 Arrear தேர்வெழுதவுள்ள பள்ளி மாணவர்களிடமிருந்து (தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டவர்களைத் தவிர்த்து) தேர்வுக் கட்டணத் தொகையினை பெற்று, அத்தொகையினை செலுத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

 ஆசிரியர்கள் குறிப்பாக, https://dgeapp.tnschools.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று அனைத்து தேர்வர்களையும் தெரிவு செய்து செலுத்த வேண்டிய மொத்த கட்டணத் தொகையினை ஆன்லைன் மூலம் 19.12.2025 வரையிலான நாட்களில் செலுத்தவேண்டும்.

தேர்வுக் கட்டண விலக்கிற்கு தகுதியானோர்:

  1. தமிழை பயிற்று மொழியாகக் கொண்டு (Tamil Medium) தேர்வெழுதும் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது.
  2. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழி தவிர இதர பயிற்று மொழிகளில் (Other than Tamil Medium) பயிலும் பின்வரும் பிரிவுகளைச் சார்ந்த மாணவர்களுக்கு விலக்களிக்கப்படுகிறது.  

SC/SCA/ST மற்றும் SC Converts (SS),  MBC/DC பிரிவைச் சேர்ந்த பெற்றோருக்கான வருமானத்திற்கு உச்சவரம்பு ஏதும் இல்லை.

BC/BCM பெற்றோரின் ஆண்டு வருமானம் - ரூ.2,50,000/-க்கு (ரூபாய் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரத்துக்கு) மிகாமல் இருப்பவர்களுக்கு மட்டும்

அனைத்துப் பள்ளிகளிலும் பயிலும் பார்வை குறைபாடுடைய மற்றும் செவித்திறன் / பேச்சுத்திறன் குறைபாடுடைய மாணவர்கள்.

 சுயநிதி / மெட்ரிகுலேஷன் மற்றும் ஆங்கிலோ-இந்தியப் பள்ளிகள்:

அதே நேரத்தில் சுயநிதி/ மெட்ரிகுலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்தியப் பள்ளிகளில் பயின்று பத்தாம் வகுப்பு / பதினோராம் வகுப்பு பொதுத் தேர்வெழுதும் மாணவர்களுக்கு தேர்வுக் கட்டண விலக்கு வழங்கப்படுவதில்லை.

 +1 Arrear தேர்வெழுதுவதற்கான கட்டணம்

ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.50/- மற்றும் இதரக் கட்டணம் ரூ.35/-

(உ-ம்) ஒரு பாடம் ரூ.50 + 35= 85/-

இரு பாடங்கள் =135/- (ரூ.100 + 35=135)

+1 Arrear தேர்வெழுதும் மாணவர்களுக்கு தேர்வுக்கட்டணம் செலுத்துவதிலிருந்து எவ்வித விலக்கும் இல்லை.

அட்டவணைப் படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் கட்டணம் (TML Fees)

2025-2026- ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வின் தேர்வு முடிவுகள் அடங்கிய அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை (TML) ஆன்லைன் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்வதற்காக, அனைத்துப் பள்ளிகளும் (எந்த ஒரு பள்ளியும் விலக்கு இல்லாமல்) ரூ.300/- செலுத்தவேண்டும்.

ஆன்லைன் மூலமாக கட்டணங்கள் செலுத்துவது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் இயக்கக ஒருங்கிணைப்பாளரை (Co-ordinators) தொடர்பு கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

கூடுதல் தகவல்களுக்கு: https://dgeapp.tnschools.gov.in