எனது மனநலமே பிரதானம் மற்றவையெல்லாம் அப்புறம் தான் எனத் தெரிவித்துள்ளார் நடிகை பூஜா பட். பிரபலமான குடும்பப் பின்னணி கொண்டவர். பாலிவுட்டின் பிரபல இயக்குநர் மகேஸ் பட்டின் மூத்த மகள். ஆலியா பட்டின் சகோதரி.


இவர் 1997-ஆம் ஆண்டு தமன்னா என்ற திரைப்படத்தில் நடித்தற்காக தேசிய விருது பெற்றார். கடைசியாக 2001 ஆம் ஆண்டு, எவ்ரிபடி சேஸ் ஐ ஆம் ஃபைன் என்ற படத்தில் நடித்தார். அதன் பின்னர் சில படங்களை இயக்கினார். பெரிதாக சோபிக்காத நிலையில் மதுபோதைக்கு அடிமையானார். பூஜா பட்டின் மதுப்பழக்கம் தீவிரமானது. பின்னர் அதை நிறுத்த அவர் சிகிச்சைகள் மேற்கொண்டார். இப்போது 5 ஆண்டுகளாக அவர் மது அருந்தும் பழக்கத்தை விடுத்த வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.


இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராமில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ”என் வாழ்வில் நான் அன்பற்று இருந்த காலத்தை என்னால் நினைவுகூர முடியாது. ஆம், அந்த அளவுக்கு என் வாழ்க்கையோடு பிண்ணிப் பிணைந்தது. அது மக்கள் மீதானதாக இருக்கட்டும், இல்லை அன்பு என்ற கருத்தாக்கத்தின் மீதான பற்றாக இருக்கட்டும். நான் செல்லுமிடமெல்லாம் அன்பைத் தேடினேன். இருளில், நாடுகளின் எல்லைகள் தாண்டி, கண்டங்கள் தாண்டி என அன்பை நான் தேடினேன். என்னை நேசித்தவர்களுக்கும் ஏன் நேசிக்காதவர்களுக்கும் அன்பை அளிப்பேன். நான் எனது தோல்விகளுக்கு எப்போதுமே மற்றவர்களைக் காரணமாகக் கூற மாட்டேன். ஏனெனில், எனது தோல்விக்கு நான் மட்டுமே காரணமாக இருக்க முடியும் என்பதுதான் உண்மை.


ஒரு நாள் இந்த உலகம் என்னை நிதானம் என்ற பண்புக்கு அறிமுகப்படுத்தியது. இப்போது அதுதான் என் வாழ்நாளின் அன்புக்கான பாத்திரமாக உள்ளது. அன்பை மற்ற வழியிலிருந்து தேடும் போக்கு அதனால் குறைந்துவிட்டது. நிதானம், இது எனது ஆன்மாவை வெளிக்கொணர்கிறது. நிதானம் எனது நிலையற்ற இரவுகளைக் கடக்கவும், ஒளி மிகுந்த விடியலை வரவேற்கவும் கற்றுக் கொடுத்துள்ளது. 


5 வருடங்கள் ஆகிவிட்டன எனக்கும் நிதானமான மனப்பாங்குக்குமான சிறப்பானது ஓர் உறவு உண்டாகி. நான் மிக மோசமான இழப்புகளை சந்தித்திருந்தாலும், புகழையும், பொருளையும் இழந்து கீழே தள்ளப்பட்டிருந்தாலும் கூட நான் மீண்டெழ இந்த நிதானம் எனக்கு பழக்கப்படுத்தியிருக்கிறது. எனது வாழ்வில் இப்போது எனது உணர்வுகளை உள்ளடக்கிய மன நலனே மிக முக்கியமானது. நிதானமாக இருத்தல், எல்லாவற்றிலும் இருந்து மீண்டு எழுதல் என் வாழ்க்கையில் முக்கியத்துவம் பெறுகின்றன. நான் எனது கொள்கைகளில் தெளிவாக இருக்கிறேன். இது ஒரு மிகப்பெரிய ஆசிர்வாதம்”


இவ்வாறு பூஜா பட் தெரிவித்திருக்கிறார்.