எனக்கு மது அருந்தும் பழக்கம் இல்லாமல் இருந்திருந்தால் நான் இப்போது இருக்கும் இடத்தை விட மேலே இருந்திருப்பேன் என்று நடிகர் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கூறினார்.
ஜெயிலர் ஆடியோ லாஞ்ச்
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் இந்த திரைப்படத்தின் ஆடியோ லாஞ்ச் சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில், நேற்று (ஜூலை 28) மாலை நடைபெற்றது. ரஜினி தவிர பிற மொழி சூப்பர் ஸ்டார்களான மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், உள்ளிட்டோருடன் தமன்னா, சுனில், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக இருப்பதால், அதில் இந்தி, தெலுங்கு, மலையாளம் என முன்னணி நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். அவர்கள் அனைவருமே நேற்று நடைபெற்ற ஆடியோ லாஞ்ச்சில் கலந்து கொண்டனர். இந்த திரைப்படம் சன் பிக்சர்ஸ் சார்பாக தயாரிக்கப்பட்டுள்ளது.
குடிப்பழக்கம் குறித்து பேசிய ரஜினி
இதில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் பல விஷயங்களை மனம் திறந்து பேசினார். குறிப்பாக தனது ரசிகர்களுக்கும், இளைஞர்களுக்கும் முக்கியமான அறிவுரையாக குடிப்பழக்கம் குறித்து விரிவாக பேசினார். "பெங்களூரில் நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதே நிறைய குடிப்பேன். குடித்து விட்டு வீட்டுக்கு செல்வேன். என் அண்ணன் அப்போது சொல்வார், நிறைய குடிக்காதே என்று. எனக்கு மட்டும் மது அருந்தும் பழக்கம் இல்லாமல் இருந்திருந்தால், தற்போது இருப்பதை விட நன்றாக இருந்திருப்பேன், மதுப்பழக்கம் என்பது நானே வைத்துக்கொண்ட சூனியம், தயவு செய்து குடிப்பதை நிறுத்துங்கள். அம்மா, மனைவி உட்பட குடும்பத்தில் உள்ள அனைவரும் உங்கள் பழக்கத்தால் சிரமப்படுவார்கள்," என்று ரஜினி கூறினார்.
குடிப்பழக்கத்தால் சமுதாயத்திற்கு சேவை செய்ய முடியவில்லை
மேலும் பேசிய அவர், "இந்த குடிப்பழக்கத்தால் என்னால் சமுதாயத்திற்கு சேவை செய்ய முடியவில்லை. குடிப்பழக்கத்தால் என் வாழ்க்கையே காலியாகிவிட்டது. தயவுசெய்து குடிக்காதீர்கள், அதை நிறுத்துங்கள். குடிப்பழக்கம் குடிக்கும் அனைவரையும் பாதிக்கிறது. அதோடு அவர்கள் ஆரோக்கியமும் குடும்பமும் வீணாகிவிடும். குடும்பத்தினர் உங்களால் நரகத்தை அனுபவிக்கிறார்கள். குடிககும் நண்பர்களுடன் பழக வேண்டாம். நீங்கள் குடிக்கத் தோன்றும் நேரத்தில், வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு படுத்துவிடுங்கள், அதே போல செய்தார் 10 நாட்களில் மாற்றம் வரும், அனுபவசாலி என்கிற முறையில் சொல்கிறேன்," என்றார்.
நெல்சனுக்கு படம் கொடுக்க வேண்டாம் என்றார்கள்
நெல்சன் குறித்து பேசுகையில், "ஜெயிலர்' அறிவிப்புக்குப் பிறகுதான் பீஸ்ட் வெளியானது. நிறைய பேர் நெல்சனுக்கு படம் கொடுக்க வேண்டாம் என சொன்னார்கள். ஆனால், எப்போதுமே ஒரு இயக்குநர் தோற்பதில்லை. அவர் எடுக்கும் சப்ஜெக்ட்டுகள்தான் தோற்கலாம். நான் சன் பிக்சர்ஸில் கேட்டேன், ஆமாம் படத்திற்கு எதிர்மறை விமர்சனங்கள் உள்ளது என்றார்கள். ஆனால் விநியோகஸ்தர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை, தமிழ்நாடெங்கும் நல்ல வசூல் என்று கூறினார்கள்," என்றார்.