சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடித்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான படம் அனிமல். திரையரங்கில் வெளியானது முதல் பல்வேறுகட்ட விமர்சனங்கள் இந்தப் படத்திற்கு எழுந்து வந்தன. ஆணாதிக்கம், பெண் வெறுப்புடைய கருத்துக்கள் அடங்கிய காட்சிகள் இப்படத்தில் நிறைந்து வழிவதாக விமர்சகர்கள் கூறினார்கள்.


இதற்கு பதிலளிக்கும் வகையில், படத்தின் க்ராஃப்ட் எதைப் பற்றியும் பேசாமல் முன்முடிவுகளோடு படத்தை விமர்சிப்பது முட்டாள்தனமானது என்று விமர்சகர்களை இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா கடுமையாகத் திட்டியிருந்தார். விமர்சனங்கள் ஒரு பக்கம் எழுந்தாலும் வெகுஜன ரசிகர்களால் அனிமல் படம் கொண்டாடப்பட்டு படம் 900 கோடிகளை வசூல் செய்தது. அனிமல் படம் சமீபத்தில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியானதைத் தொடர்ந்து பல்வேறு தரப்பு மக்களிடம் இருந்து படத்துக்கு விமர்சனங்கள் வலுத்து வருகின்றன.


இப்படம் தொடர்பாக நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு மிகவும் வருத்தமான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது அனிமல் திரைப்படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. ஆனால் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினரான நான், துன்புறுத்தல்கள், துஷ்பிரயோகங்கள், திருமணத்துக்கு பின்னான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் முத்தலாக் போன்ற பல பிரச்னைகளைச் சந்தித்துள்ளேன். அனிமல் போன்ற ஒரு பெண் வெறுப்பு திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய அளவில் வசூல் செய்யும் படங்களில் ஒன்றாக உருவாகின்றது என்றால், அதை வெற்றிபெறச் செய்யும் மக்களின் மனநிலையைப் பற்றி நாம் யோசிக்க வேண்டும்.


இதற்கு முன்னர் இதே மாதிரியான கதையைக் கொண்ட அர்ஜூன் ரெட்டி மற்றும் கபீர் சிங் படங்களும் கூட பிரச்சினைதான். அதற்காக இயக்குநரைக் குறை கூறுவது சரியானதாக இருக்காது. இயக்குநரின் பார்வையில், வெற்றிதான் முக்கியம். மேலும், சமூகத்தில் நடப்பதை என்பதை திரைப்படங்களில் பிரதிபலிக்கின்றோம். ஆனால் பெண்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை பற்றி பேசுகிறோம் என்று கூறுவார்கள்.


என் மகள்கள் இதுபோன்ற பெண் வெறுப்பு படங்களை பார்ப்பதை நான் ஒருபோதும் விரும்பமாட்டேன். ஆனால் அனிமல் திரைப்படம் என்ன மாதிரியான கதையை மைய்யப்படுத்தியது என்பதை தெரிந்துகொள்ள விரும்பியதால் எனது மகள்கள் அனிமல் படத்தை பார்த்தார்கள். படத்தை பார்த்த பின்னர், அம்மா தயவு செய்து அந்த படத்தைப் பார்க்காதீர்கள் என்று எச்சரிக்கையாக கூறினார்கள். இப்படிப்பட்ட படங்களுக்கு ரிப்பீட் ஆடியன்ஸ் உருவாகும்போது நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்ற அச்சம் ஏற்படுகின்றது” என மிகவும் வருத்தமாகக் கூறினார். 


இதற்கு முன்னர் பாடகர் ஸ்ரீநிவாஸ் அனிமல் படத்தை கடுமையாக விமர்சித்துப் பதிவிட்டிருந்தார். அதில் “மிருகங்களுக்காக மிருகங்களால் எடுக்கப்பட்ட படம் அனிமல்” என்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.