உலக நாயகன் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என தமிழகமே கொண்டாடித் தீர்க்கும் இரு ஸ்டார் நட்சத்திரங்கள் இன்றளவும் அதே கம்பீரத்துடனும் அதே சுறுசுறுப்புடனும் செயல்பட்டு வருவதுடன், அவர்களின் மார்க்கெட்டையும் சற்றும் இழக்காமல் முன்னணி நடிகர்களாக இருந்து வருகிறார்கள். இவர்கள் இருவருக்கும் உலகளவில் ரசிகர்கள் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே.  


ரஜினி - கமல் நட்பு :  


ரஜினிகாந்த் - கமல்ஹாசன் இருவரும் அன்று போல் இன்றும் அதே நட்புடன் இருந்து வந்தாலும் அவர்களுக்குள் ஒரு ஆரோக்கியமான போட்டி நிச்சயம் உண்டு. இருவரும் நடித்த படங்கள் ஒரு முறை தவிர என்றுமே ஒன்றுடன் ஒன்று கிளாஷ் ஆனதில்லை. ரஜினியின் 'சந்திரமுகி' மற்றும் கமல்ஹாசனின் 'மும்பை எக்ஸ்பிரஸ்' திரைப்படங்கள் 2005ம் ஆண்டு நேரடியாக களத்தில் இறங்கின. அதைத் தொடர்ந்து தற்போது ரஜினியின் ஆல் டைம் பேவரட் 'முத்து' திரைப்படமும், கமல்ஹாசனின் வித்தியாசமான நடிப்பில் வெளியான 'ஆளவந்தான்' திரைப்படமும் ஒரே நாளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது அவர்கள் இருவரின் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


 



'முத்து' ரீ ரிலீஸ் : 



1995ம் ஆண்டு கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில், கே. பாலச்சந்தர் தயாரிப்பில், ரஜினிகாந்த், மீனா, சரத்பாபு, ரகுவரன், பொன்னம்பலம், ராதாரவி, வடிவேலு, செந்தில் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான 'முத்து' திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. வசூல் ரீதியிலும் விமர்சன ரீதியிலும் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படத்தை, ஏ.ஆர். ரஹ்மானின் இசை கூடுதலாக அலங்கரித்தது. இன்றளவும் இப்படம் தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு எவர்க்ரீன் கிளாசிக் திரைப்படமாக இருந்து வருகிறது.


 



கமலின் இரட்டை டையர் : 


2001ம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், கலைப்புலி தாணு தயாரிப்பில், கமலின் வித்தியாசமான இரட்டை கதாபாத்திரத்தில், முற்றிலும் மாறுபட்ட திரைக்கதையுடன் தீபாவளி ரிலீஸ்  படமாக வெளியான இப்படம் சுமார் இருபத்தைந்து கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. தமிழ் சினிமாவை தன்னுடைய அசத்தலான நடிப்பால் உலக தரத்திற்கு கொண்டு சென்ற பெருமையை பெற்றார் கமல்ஹாசன்


ஒரே நாளில் ரீ ரிலீஸ் : 


28 ஆண்டுகளைக் கடந்த ரஜினியின் 'முத்து' திரைப்படமும் 22 ஆண்டுகளைக் கடந்த கமலின் 'ஆளவந்தான்' திரைப்படமும் ஒரே நாளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டன. இத்தனை ஆண்டுகளை கடந்த பின்பும் இன்றும் அவர்கள் படங்கள் ஒரே நாளில் ரீ ரிலீஸ் ஆவது அவர்களின் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அடுத்தபடியாக இருவரில் யாருடைய படம் அதிக அளவு வசூலை முதல் நாளில் ஈட்டியது என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டினார்கள்.


கமலின் 'ஆளவந்தான்' திரைப்படம் 1000 திரையரங்கங்களில் வெளியான நிலையில் ரஜினிகாந்தின் 'முத்து' திரைப்படமும் அதற்கு ஈடாக ஏராளமான திரையரங்கில் வெளியானது. இதில் ஆளவந்தான் திரைப்படம் 50 நிமிடங்கள் மீண்டும் எடிட் செய்யப்பட்டு வெளியானதாகத் தெரிவிக்கப்பட்டது.


முன்னணியில் யார் ?  


ரீ ரிலீஸான முதல் நாள் இரு படங்களுக்கும் சரிசமமான வரவேற்பை பெற்றன. இரு படங்களையும் காண இன்றளவும் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். முதல் நாளில் முத்து திரைப்படத்தின் வசூல் முன்னணியில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.


ரஜினிகாந்தின் முத்து திரைப்படம் முதல் மூன்று தினங்களில் 6 லட்சம் முதல் 7 லட்சங்கள் வரை வசூலித்துள்ளதாகவும், கமல்ஹாசனின் ஆளவந்தான் திரைப்படம் 15 லட்சங்களை வசூலித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இரு படங்களின் வசூல் தொகையும் மேலும் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


உற்ற நண்பர்கள், உச்ச நட்சத்திரங்களுமான இருவரது படங்களும் ஒரே நேரத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருவது இருவரது ரசிகர்கள் மத்தியிலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.