ஏ.ஆர்.ரஹ்மான் தன்னை மிகப்பெரிய பாடகனாக மாற்றியதாக மறைந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் பெருமைப்பட்ட தருணம் என்ன என்பதை பார்க்கலாம். 


இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 1999 ஆம் ஆண்டு சங்கமம் என்ற படத்துக்கு இசையமைத்தார். ரகுமான், விந்தியா, மணிவண்ணன், விஜயகுமார், ராதாரவி, ஸ்ரீவித்யா என பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். சுரேஷ் கிருஷ்ணா சங்கமம் படத்தை இயக்கினார். இந்த படத்தில் மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம் என்ற பாடல் மறைந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், பாடகர் ஹரிஹரன் ஆகியோர் பாடியிருப்பார்கள். காலத்துக்கும் நிலைக்கக்கூடிய பாடலாக இது அமைந்தது. 


அப்படிப்பட்ட பாடலின் பின்னால் ஒரு சுவாரஸ்ய தகவல் ஒன்று உண்டு. அதாவது மறைந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியனை போனில் அழைத்துள்ளார். அப்போது, “ஏ.ஆர்.ரஹ்மான் சங்கமம் படத்தில் பாடுவதற்காக என்னை அழைத்தார். நான் ரொம்ப ஆனந்தமாக போனேன். பாட்டு சொல்லிக் கொடுங்க தம்பி என ரஹ்மானிடம் கேட்டேன். எப்படிண்ணே உங்களுக்கு நான் சொல்லிக் கொடுக்கிறது என அவர் என்னிடம் கேட்டார். நான் இசையமைப்பாளராக இருந்தால் பாட்டு சொல்லிக் கொடுப்பேன் என கூறி ரஹ்மானை எப்படி பாட வேண்டும் என சொல்ல வைத்தேன். அப்புறம் நானும் சில வரிகள் பாடினேன்.


அப்பதான் ஒரு இசையமைப்பாளராக பாடகர்களுக்கு எவ்வளவு வேதனை கொடுத்திருப்பேன் என புரிந்தது. சரி என நானும் பாடினேன். என்ன பாடினாலும் நல்லா இருக்குன்னு ரஹ்மான் சொன்னாரு. வேற மாதிரி பாடுங்க பாடுங்க என சொல்லவும் நான் எனக்கு தெரிஞ்சதெல்லாம் கொட்டி விட்டேன். எல்லாம் முடிந்த பிறகு பாட்டை போடுங்க கேட்டு பார்ப்போம் என சொன்னேன். அதெல்லாம் எடிட் பண்ண வேண்டியிருக்கு, இப்ப கேட்க முடியாது என ரஹ்மான் சொல்லி விட்டார். 


எனக்கு எடிட் என்றால் என்னவென்றே தெரியவில்லை. நம்ம இசையமைக்கும் போதெல்லாம் ஒரே டேக் எடுத்து தானே கேட்போம் என நினைத்துக் கொண்டேன். சரி நம்ம பாடுனது பிடிக்கவில்லை போல நினைத்து அங்கிருந்து வந்து விட்டேன். அந்த பாட்டுக்கு நல்ல சம்பளம் கொடுத்தாரு, காலில் எல்லாம் விழுந்தாரு. சரி நம்மளை சமாதானம் செய்ய இப்படி பண்ணுகிறார் என நினைத்தேன்.  பின்னர் அந்த பாடலை நான் ஒருநாள் ரேடியோவில் கேட்டேன். ரஹ்மான் என்னவெல்லாம் பண்ணியிருக்கிறார். என்னையவே ஒரு பெரிய பாடகர் மாதிரி பண்ணிட்டாரு” என கூறியுள்ளார்.  பாட அழைத்ததும் குழந்தைபோல மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார் எம்.எஸ்.விஸ்வநாதன் எனவும் எஸ்.பி.பி. அந்த நேர்காணலில் பேசியிருப்பார். 


மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாட ஆரம்பிக்கும்போது நமக்கு என்ன வருகிறதோ அதை பெற்றுக் கொண்டு நன்றாக இருக்கிறது என சொல்வார். ஆனால், தான் சொன்னபடி ஒருமுறை பாட கூறுவார். எதை வைக்கலாம் என அந்த இடத்தில் முடிவு செய்ய மாட்டார்” என எஸ்.பி.பாலசுப்பிரமணியன் கூறியுள்ளார்.