வழக்கமான காதல் பாடல்களின் இருப்பதைப் போல, உதடுகளையோ, கன்னங்களையோ வர்ணித்து பாடல்களைத் தன்னால் எழுத முடியாது என இசையமைப்பாளரும் பாடகருமான கைலாஷ் கெர் தெரிவித்துள்ளார். இவர் தமிழில் `ரங்கு ரங்கம்மா’, `இந்தப் பொறப்புதான்’, `ஆளப்போறான் தமிழன்’, `தாய்மடியில் நான் தலையைச் சாய்க்கிறேன்’ முதலான பிரபலமான பாடல்களைப் பாடியவர். 


இசை மற்றும் பாடல்கள் எழுதுவது பற்றிய தனது ஸ்டைல் குறித்து பேசிய கைலாஷ் கெர், `என்னால் கன்னங்களையும், உதடுகளையும் போற்றிக் கொண்டு பொய் பேச முடியாது. நான் அழிந்த போகக்கூடியவை பற்றி பேச மாடேன்.. நான் உணர்வுகளைப் பற்றி பேசுவேன். பிறரை போல நான் எழுதுவதில்லை. அதுவும் பொழுதுபோக்கு என்றாலும், நான் என் இசையை அவ்வாறு அனுபவிப்பதில்லை. மர்லின் மன்றோ உட்பட மிக அழகான மனிதர்கள் இறந்து சாம்பலானதைக் கண்டிருக்கிறோம்.. ஆனால் அவர்களிடம் நம்மை ஈர்த்தது இன்றும் இறக்காமல் இருக்கிறது’ எனக் கூறியுள்ளார். இவருக்குக் கடந்த 2017ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.


இசைத்துறையில் தன் பயணம் குறித்து பேசிய கைலாஷ் கெர், `நான் என் விருப்பத்திற்கேற்ற பாடகராகவும், இசையமைப்பாளராகவும் ஆக வேண்டும் என எப்போதும் கனவு கண்டிருக்கிறேன். சினிமாவுக்கு வரும் பெரும்பாலானோர் பின்னணி பாடகர் ஆக வேண்டும் என நினைப்பார்கள். ஆனால் எனக்கு சினிமாவில் பாடுவதோ, பின்னணியில் பாடுவதோ எதுவுமே தெரியாமல் இருந்தது. எனக்கென்று தனித்துவமான பாடல் எழுதுவது, இசையமைப்பது, பாடுவது என்ற தனி ஸ்டைல் இருந்தது. தனித்துவமாக இருப்பவர்களை உலகம் ஏற்றுக் கொள்வதில்லை. உங்களைக் கீழே தள்ளிவிட நினைக்கும். நீங்கள் அவர்களைப் போல இல்லை என்பதால் உங்களை அவமானப்படுத்தும்.. நிறவெறி முதலானவை  தோன்றியதற்கு இதுவே காரணம்’ எனக் கூறியுள்ளார். 



தொடர்ந்து பேசிய அவர், `நான் 2002ஆம் ஆண்டு மும்பைக்கு வந்தேன்.. அப்போது பாடல் கம்பெனிகள் என்னை நிராகரித்தன. பள்ளி, கல்லூரி செல்லாத நான் பாடல் ரெக்கார்ட் கம்பெனிகள் கூறுவதில் இருந்து சொற்களைக் கற்றுக் கொண்டேன். ஒரு நாள் எனக்கு போன் வந்தது. `நான் விஷால் பேசுகிறேன். எங்கள் திரைப்படத்திற்காக நீங்கள் பாட வேண்டும்’ எனக் கேட்டார்கள்.. `நீங்கள் விஷால் பரத்வாஜா?’ எனக் கேட்டேன். அவர் விஷால் பரத்வாஜ் இல்லை எனவும், விஷால் - சேகர் இசையமைப்பாளர் கூட்டணி எனவும் அறிமுகப்படுத்தினார்கள். அப்படித்தான் எனக்கு முதல் படம் கிடைத்தது’ எனத் தெரிவித்துள்ளார். 


கடந்த சில ஆண்டுகளாக, `நய் உடான்’ என்ற திட்டத்தின் மூலமாக தனது பிறந்தநாளின் போது புதிய பாடகர்களை அறிமுகப்படுத்தி வருகிறார் கைலாஷ் கெர். இன்று அவரது பிறந்தநாள் என்பதால், `டம்ரூ’ செயலியின் நேரலையில் இரவு 8 மணிக்குப் புதிதாக 9 பாடகர்களை அறிமுகம் செய்கிறார் கைலாஷ் கெர்.