வார்த்தைகள் தான் முக்கியம் என்றால் படத்தில் பாடல் காட்சியே அவசியம் இல்லை என இளையராஜா பேசும் பழைய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 


தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் இளையராஜா, கவிஞர் வைரமுத்து இடையே எழுந்துள்ள மோதல் மிகப்பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. பாடல்களுக்கு முக்கியம் இசையா?, வரிகளா? என காரசார விவாதம் எழுந்துள்ளது. இளையராஜாவை விமர்சித்ததாக வைரமுத்து கங்கை அமரன் நேரடியாக வீடியோ வெளியிட்டு கண்டித்தார். திரையுலகினர் பலரும் இருவருக்குமிடையேயான கருத்து மோதலுக்கு பதிலளித்து வருகின்றனர். இப்படியான நிலையில் பழைய வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. 


ஒரு நேர்காணலில் இளையராஜா மற்றும் மறைந்த பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் இருவரும் உரையாடுகின்றனர். அதில் எஸ்பிபி, “சில பேர் பாடல்களுக்கு இசை தான் முக்கியம் என சொல்கிறார்கள்.. சிலர் வார்த்தை முக்கியம் என சொல்கிறார்கள். இரண்டில் எது முக்கியம்?. உன்னோட அபிப்ராயம் என்ன?” என கேட்டிருப்பார். அதற்கு பதிலளிக்கும் இளையராஜா, “இந்த கேள்வியானது இரண்டையும் சரியாக புரிந்து கொள்ளாதவர்கள் மனக்கோணத்தில் இருந்து வருவதாகும். காரணம் என்னவென்று கேட்டால், நான் ஒருமுறை கவிஞர் கண்ணதாசனிடம் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது, “அண்ணன் சினிமாவில் பாட்டெழுதுபவர்களை எல்லாம் இலக்கியவாதிகள் ஏற்றுக் கொள்வதில்லையே. என்ன காரணம்?” என கேட்டேன். 


இதற்கு, “இல்ல தம்பி. எங்களுக்கு இலக்கணம் தெரியாது என அவர்கள் நினைத்து கொள்கிறார்கள். ஆனால் அப்படியில்லை. சந்தம் இல்லாமல் வார்த்தையில்லை. வார்த்தை இல்லாமல் ட்யூன் இல்லை. ட்யூன் இல்லாமல் சந்தம் இல்லை. நீ எந்த வார்த்தை சொன்னாலும் அது ட்யூனில் தான் இருக்கிறது. நான் மான் தானே, தேன் தானே, நான் தானே என எழுதினால் அதற்கு ஒரு சந்தம் பிரிக்க தெரியும். நீ இதே வார்த்தையை ட்யூன் ஆக போட்டால் நான் இதைத்தான் எழுதி தர முடியும். ட்யூன் இல்லாமல் வார்த்தை எங்க இருக்கு, வார்த்தை இல்லாமல் ட்யூன் எங்க இருக்கு. இந்த கேள்வியே முட்டாள் தனமானது. 






வார்த்தைகள் தான் முக்கியம் என்றால் படத்தில் பாடல் காட்சியே அவசியம் இல்லை. வார்த்தையாக வசனம் வழியாக பேசிக்கொண்டு போய் விடலாம். பாட்டின் உணர்வுகளை கொண்டு வருவதே இசை தான். அது இறந்த உடலுக்கு உயிரூட்டுவது போல தான். அதேசமயம் இசை தான் முக்கியம் இல்ல. வார்த்தைகளுக்குள் ட்யூன் இருக்கிறது. ட்யூனில் சந்தமும், சந்தத்தில் ரிதமும், ரிதத்தில் சப்தஸ்வரங்களும் இருக்கிறது. 


அதனால் இதுதான் முக்கியம் என வாதாடுவது முட்டாள்தனம். நான் எழுதும் வார்த்தைக்கு தான் நீங்கள் ட்யூன் போட வேண்டும் என சொல்வது எப்படி இருக்கிறது என்றால், ஒரு டெய்லர் நான் தைக்கும் சட்டையை தான் நீ போட்டுக்கொள்ள வேண்டும் என சொல்வது எவ்வளவு முட்டாள் தனம், என்ன தேவையோ அதை தைத்து கொடுக்க வேண்டும். இப்படி சொல்வது இயலாமையை காட்டுகிறது” என இளையராஜா சொல்லியிருப்பார்.