இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ அனைவரையும் கவர்ந்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் அடுத்தடுத்து படங்களுக்கு இசையமைத்து வருகிறார். சமீபத்தில் அவரின் இசையில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்த “லால் சலாம்” படம் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. பெரும்பாலான நேரம் வெளிநாடுகளில் இருக்கும் ரஹ்மான் தன்னுடைய படங்களுக்கு இசையமைக்கும் பணியை அங்கிருந்து தான் மேற்கொண்டும் வருகிறார்.
இப்படியான நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது அமெரிக்காவில் உள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டு கடந்த ஆண்டு செப்டம்பரில் அமெரிக்காவின் நிவாடா மாநிலத்திலுள்ள லாஸ் வேகஸ் நகரில் இசை மற்றும் பொழுதுபோக்கு விஷயங்களுக்கான கோள வடிவ அரங்கம் ஒன்று திறக்கப்பட்டது. இந்த இடத்துக்கு சென்றுள்ள ஏ.ஆர்.ரஹ்மான் அங்கிருந்த ஒரு விஷயத்தை பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளார்.
ஆம். அந்த அரங்கத்தில் மனிதர்களுடன் உரையாடும் ரோபோ ஒன்று இடம் பெற்றிருந்தது. அதனை வீடியோவாக பதிவிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “கடைசியாக மனிதர்களுடன் உரையாடும் ரோபோவை கண்டறிந்தேன்” என தெரிவித்துள்ளார். இந்த வீடியோவின் பின்னணியில் எந்திரன் படத்தில் இடம் பெற்ற “இரும்பிலே ஒரு இருதயம்” பாடல் இடம் பெற்றுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த பதிவுக்கு பலரும் ஹார்ட்டின்களை பறக்க விட்டுள்ளனர்.
எந்திரன் படம்
கடந்த 2010 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் “எந்திரன்” படம் வெளியானது. இப்படத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், டேனி டென்சோங்பா, சந்தானம், கருணாஸ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். அறிவியலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். மனிதர்களின் கண்டுபிடிப்புகளில் ஒன்றாக ரோபோட்களுக்கு உணர்வுகள் வந்தால் எப்படி இருக்கும் என்பதை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டிருந்தது.
ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் “2.0” என்ற பெயரில் 2018 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தையும் ஷங்கர் இயக்கிய நிலையில் ரஜினியே ஹீரோவாக நடித்தார். அதுமட்டுமல்லாமல் ஹீரோயினாக எமி ஜாக்சனும், வில்லனாக அக்ஷய் குமாரும் நடித்திருந்தனர். இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில் ரூ.800 கோடி வசூலை குவித்தது. தமிழ் சினிமாவில் அதிக வசூலை குவித்த படம் என்ற பெருமையும் இன்றுவரை இப்படம் கொண்டுள்ளது.