தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழும் யுவன் ஷங்கர் ராஜா இன்று தனது 44வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இசைஞானி இளையராஜாவின் வாரிசு
யுவன் சினிமாவில் அறிமுகமாகும் போது வயது 16 தான். இசைஞானி இளையராஜாவின் மகன் என்ற அடையாளத்துடன் தான் இந்த துறைக்குள் வந்தார். 1997 ஆம் ஆண்டு சரத்குமார் நடித்த அரவிந்தன் படம் அவரின் முதல் படமாக வந்தது. வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்த யுவனின் சில இசைக்கோர்வைகளைக் கேட்ட தயாரிப்பாளர் டி.சிவா அந்த படத்தின் சில காட்சிகளுக்கு இசையமைக்க சொல்லியுள்ளார். அதன்படி யுவனின் இசை அவரை கவர, முழு படமும் யுவன் வசமாகியது.
வித்தியாசமாக தெரிந்த யுவன்
சூர்யா நடித்த பூவெல்லாம் கேட்டுப்பார் படம் யுவனுக்கு நல்ல அடையாளமாக அமைந்தது. கிராமத்து இசையில் வெளுத்து வாங்குவார் இளையராஜா. ஆனால் யுவனோ அப்படியே நேரெதிராக காலத்துக்கேற்ற இசையில் மாற்றம் கண்டார். யுவனின் இசையில் பிடித்தது பாடலா, பின்னணியில் ஒலிக்கும் இசையா என கேட்டால் நம்மிடம் சட்டென்று பதில் வராது. ஆனால் தமிழ் சினிமாவின் பிஜிஎம் எனப்படும் பின்னணி இசையின் கிங் யார் என கேட்டால் அனைவரது பதிலும் யுவன் ஷங்கர் ராஜாவை தான் கூறும்.
தீனா, பில்லா, மங்காத்தா, ராம், சண்டக்கோழி, புதுப்பேட்டை, மன்மதன், வல்லவன், பருத்தி வீரன், தாமிரபரணி, அஞ்சான் உள்ளிட்ட பல படங்களின் இசை இன்றைக்கு கேட்டாலே நம் உடல் சிலிர்த்து விடும். யுவனின் பலமே தந்தை இளையராஜாவின் சாயல் துளி கூட இல்லாமல் இசையை வழங்குவது தான்.
யுவனின் மயக்கும் குரல்
கிட்டதட்ட 150 படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ள யுவனின் மாயக்குரலை கேட்டாலே, ரசிகர்கள் சொக்கிப் போய் விடுவார்கள். ஒருநாளில் வாழ்க்கை, சாய்ந்து சாய்ந்து,போகாதே போகாதே, என் காதல் சொல்ல, ஏதோ ஒன்று என்னை தாக்க போன்ற பாடல்களை கேட்டால் நம்மை உள்ளுக்குள் ஏதோ செய்யும். தன் படங்கள் மட்டுமல்லாமல் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத் உள்ளிட்டவர்களின் இசையிலும் பாடியுள்ளார்.
மேலும் தமிழ் நாட்டில் "ரீமிக்ஸ்” கலாச்சாரத்தை தொடங்கி வைத்த பெருமையும் யுவனையே சேரும். குறும்பு படத்தில் இடம்பெற்ற ஆசை நூறு வகை பாடல் தான் தமிழ் சினிமாவில் முதல்முதலாக ரீமேக் செய்திருந்தார். அமீர், செல்வராகவன், ராம், வெங்கட் பிரபு, தியாகராஜன் குமாரராஜா என குறிப்பிட்ட சில இயக்குநர்கள் யுவன் இல்லாமல் படம் இயக்க மாட்டார்கள் என்றே சொல்லலாம்.
தயாரிப்பாளராக பரிணாமம்
இடையில் இசைக்கு கொஞ்சம் இடைவெளி விட்ட நிலையில் ரசிகர்கள் யுவனை ரொம்ப மிஸ் பண்ணினார்கள். இந்த காலக்கட்டத்தில் அவர் பியார் பிரேம காதல் படத்தின் மூலம் தயாரிப்பாளரானார். தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏராளமான படங்களுக்கு இசையமைத்து கம்பேக் கொடுத்துள்ளார். தற்போது விஜய் நடிக்கவுள்ள 68வது படத்துக்கு இசையமைக்கிறார். இசைக்கு என்றும் அழிவே கிடையாது. அது இசையமைப்பாளர்களுக்கும் பொருந்தும். மென்மேலும் வளர யுவன் பிறந்தநாளில் வாழ்த்துவோம்.