நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
ரசிகர்கள் அதிர்ச்சி
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் விஜய் ஆண்டனி. நாகர்கோவில் மாவட்டத்தைச் சேர்ந்த அவர், சின்னத்திரையில் சில சீரியல்களுக்கு பணியாற்றிய நிலையில், சுக்ரன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து விஜய் தொடங்கி பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்துள்ள விஜய் ஆண்டனி, இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.
சமீபத்தில் கூட சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்தி ரசிகர்களை மகிழ்வித்த நிலையில், அந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் தொடர்ந்து வைரலாகி வரும் நிலையில், மிகப்பெரிய சோகம் விஜய் ஆண்டனி வாழ்க்கையில் நடந்துள்ளது. அவரின் மூத்த மகள் மீரா ஆயிரம் விளக்கில் உள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். 16 வயதான அப்பெண் இன்று அதிகாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் திரையுலகினர், ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அன்று அப்பா.. இன்று மகள்
சமூக வலைத்தளங்கள் வாயிலாக விஜய் ஆண்டனிக்கு பலரும் தங்கள் இரங்கல்களையும், ஆறுதல்களையும் தெரிவித்து வரும் நிலையில் சோகங்கள் மட்டுமே நிறைந்ததாக விஜய் ஆண்டனியின் வாழ்க்கை உள்ளது என்பது இணையத்தில் உலா வரும் வீடியோ ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது. அந்த வீடியோவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ‘வாழ்க்கையில் ஒருவருக்கு எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும், கஷ்டம் வந்தாலும் தற்கொலை மட்டும் செய்யக் கூடாது. அதுவும் தான் வாங்காத கடனுக்காக எல்லாம் அப்படி பண்ணக்கூடாது. என்னுடைய தந்தை வந்து தற்கொலை செய்துக் கொண்டார். அப்போது எனக்கு 7 வயது, என்னுடைய தங்கைக்கு 5 வயது. என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை என்பதால் தற்கொலைக்கு என்ன காரணம் என சொல்ல வேண்டிய தேவையில்லை.
அதன்பிறகு என்னுடைய அம்மா, கைக்குழந்தைகளை வைத்துக் கொண்டு எவ்வளவு கஷ்டப்பட்டாங்கன்னு தெரியும். அந்த வலி மிக அதிகம். நான் அமைதியா இருக்கேன், அதிகம் பேசமாட்டேன், அழுத்தமா இருக்கேன், சில விஷயங்கள் கவனிக்கிறேன் என்றால் வாழ்க்கையில் எல்லாவற்றையும் பார்த்து விட்டேன். வாழ்க்கை எவ்வளவு வலி நிறைந்தது என எனக்கு தெரியும்” என அந்த வீடியோவில் விஜய் ஆண்டனி பேசியுள்ளார்.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவற்றை, நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)