சினிமாவில் தன்னுடைய அடுத்த கட்ட நகர்வுக்கு நடிகர் விஜய் தான் காரணம் என இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். 


ரவிகிருஷ்ணா, அனிதா, சிறப்பு தோற்றத்தில் நடிகர் விஜய் நடித்த படம் ‘சுக்ரன்’. எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக விஜய் ஆண்டனி அறிமுகமானார். திரையுலகில் விஜய் ஆண்டனி நடிகர் விஜய், தனுஷ் படங்களை தவிர்த்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்காவிட்டாலும், அவரின் ஸ்டைலும், புரியாத வார்த்தைகளால் பாடல்களிலும் செய்யும் மேஜிக்கும் ரசிகர்களை கவர்ந்தது. 


பல படங்களுக்கு இசையமைத்த விஜய் ஆண்டனி, “நான்” படத்தின் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து தனது படங்களுக்கு தயாரிப்பாளராகவும் மாறிய அவர், “பிச்சைக்காரன்  2” படத்தின் மூலம் இயக்குநராகவும் புதிய பரிணாமம் எடுத்துள்ளார். இதனிடையே விஜய் படத்தால் தான் சினிமாவில் தன்னுடைய அடுத்த கட்ட நகர்வு இருந்தது என விஜய் ஆண்டனி கூறியுள்ளார். 


அவர் அந்த நேர்காணலில், “ என்னுடைய உண்மையான பெயர் பிரான்சிஸ் ஆண்டனி சிரில் ராஜா. சென்னை வந்து வேலை தேடிய புதிதில் பெயரை அக்னி என மாற்றி சட்டப்பூர்வமாக பதிவு செய்து விட்டேன். மதம் சார்ந்த பெயராக இருக்ககூடாது என அப்படி மாற்றினேன். திரையுலகில் நிறைய பேருக்கு அந்த பெயர் தான் தெரியும். அப்புறம் எஸ்.ஏ.சந்திரசேகர் சுக்ரன் படத்தின் வாய்ப்பு கொடுக்கும்போது அக்னி பெயர் எனக்கு செட் ஆகவில்லை என கூறினார். பின்னர் அவர் தான் விஜய் ஆண்டனி என பெயரை எனக்கு வைத்தார். 


எனக்கு படிக்க பிடிக்காததால், உடனடியாக பணம் சம்பாதிக்க சினிமாவை விட்டால் வேறு வழியில்லை என நினைத்து சினிமாவுக்குள் வந்தேன். ஆனால் அதுக்கான எந்த பயிற்சியும் எடுக்கவில்லை. கொட்டு அடித்து பாட்டு பாடுவேன் என்பதால் நான் ஒரு இசையமைப்பாளர் என நினைத்துக் கொள்வேன். சினிமாவில் இசை அமைத்தால் மணி ரத்னம் படத்துக்கு மட்டும் தான் பண்ணுவேன் என சொல்வேன். 


சென்னை வந்தபிறகு தான் எனக்கு எதுவும் தெரியாது என்பது புரிந்தது. அதனால் சவுண்ட் என்ஜீனியராக சேர்ந்து மியூசிக் பண்ணி இந்த இடத்துக்கு வந்துருக்கேன். சின்ன பாப்பா பெரிய பாப்பா, காதலிக்க நேரமில்லை, கனா காணும் காலங்கள் ஆகிய சீரியலுக்கு இசையமைத்தேன். 


எனக்கு பிடித்தமான நடிகர்கள் பட்டியலில் ரஜினி,கமல் இருந்தாலும் நடிப்பை தாண்டி அனைவரையும் மகிழ்விப்பது என்பதில் விஜய்யை எனக்கு பிடிக்கும். காதலில் விழுந்தேன் பட விழாவில் அவரை முதன்முதலில் சந்தித்தேன். நாக்க முக்க பாடலை பாராட்டினார். அதன்பிறகு வேட்டைக்காரன் படத்தில் வாய்ப்பு கொடுப்பார் என நினைக்கவில்லை. ஒருநாள் ஏவிஎம் நிறுவனத்தில் இருந்து போன் வந்தது. விஜய் தான் நான் இசையமைத்தால் நன்றாக இருக்கும் என சொல்லி பாராட்டி வாய்ப்பு வழங்கினார். அதன்பிறகு வேலாயுதம் பட வாய்ப்பும் கொடுத்தார். 


இந்த படங்களுக்கு முன்னால் இசையமைப்பாளர் பயணம் சரியாக போகவில்லை என நினைத்து 2 ஆண்டுகளில் நடிகராக போகிறேன் என நண்பர்களிடம் சொன்னேன். அதனை காப்பாற்றவே நடிகரானேன். அதேசமயம் விஜய் படங்களுக்குப்  பிறகு இசையமைப்பாளராகவும் நான் வளர்ச்சியைப் பெற்றேன்”  என நடிகர்  விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.