இன்று இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் அவர்களுக்கு 37 ஆவது பிறந்தநாள். தமிழ் இசையமைப்பாளர்களில் அதிகளவு கவனம் பெறாதவர் ஜஸ்டின் பிரபாகரன் என்றே சொல்லலாம். தமிழ் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே இவர் கிட்டதட்ட 55 குறும்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் .மேலும் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் 20க்கும் மேற்பட்டத் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். அவர் இசையமைத்து நாம் ரசித்தப் பாடல்களை பார்க்கலாம்.


பண்ணையாரும் பத்மினியும்


பண்ணையாரும் பத்மினியும் திரைப்படத்தின் வழியாக இசையமைப்பாளராக அறிமுகமானார் ஜஸ்டின் பிரபாகரன். மிகச் சிறிய பட்ஜெட்டில் வழக்கமான கமர்சியல் படமாக இல்லாமல் ஒரு அழகான கதையைச் சொல்லியது இந்தப் படம் . இத்தகைய படத்திற்கு பெரும் பக்கபலமாக இருந்தது இந்தப் படத்தில் இடம்பெற்றப் பாடல்கள். குழந்தைகளுக்கான பாடலாக  அமைந்த ’ எங்க ஊரு வண்டி’ பாடல் மற்றும் ‘உனக்காக பொறந்தாளே ஒரு அழகி’ , ’பேசுறேன் பேசுறேன்’ ஆகிய இரண்டு அழகான மெல்லிசைப் பாடல்கள் அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் கவனம் பெற்றன.


ஒரு நாள் கூத்து


’அடியே அழகே’ என்கிறப் பாடலை இசையமைத்து அந்தப் பாடலை மற்றொரு இசையமைப்பாளரான ஷான் ரோல்டனை பாடவைத்திருப்பார் ஜஸ்டின் பிரபாகரன்.


பாவக்கதைகள்


 நெட்ஃப்ளிக்ஸில் வெளியான  பாவக்கதைகள் ஆந்தலாஜியில் இயக்குநர் சுதா கொங்காரா இயக்கிய பகுதி ’தங்கம்’. சாந்தனு , காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் நடித்திருந்தனர். ஒரு திருநங்கையாக நடித்திருந்த காளிதாஸ் ஜெயராமுக்காக ’தங்கமே’ என்கிறப் பாடலை இசையமைத்திருந்தார் ஜஸ்டின் பிரபாகரன். அந்த மொத்த ஆந்தலாஜியில் பாடலாக நிலைத்து நின்ற பாடல் இது.


மான்ஸ்டர்


எஸ்,ஜே சூர்யா மற்றும் பிரியா பவானி ஷங்கர் நடித்திருந்த இந்தப் படத்தில் ’அந்தி மாலை நேரம்’ என்கிற க்யூட்டான பாடலை இசையமைத்தவரும் ஜஸ்டின் தான்.


இசையமைப்பாளர் சாம் சி.எஸ்  பேட்டி ஒன்றில் “இன்று பெரிய நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்தால் மட்டுமே ஒரு இசையமைப்பாளரின் பெயர் மக்களுக்கு தெரிகிறது. அதே நேரத்தில் சின்ன பட்ஜெட் படங்களுக்கு சிறந்த இசையை நாங்கள் வழங்குகிறோம் எங்கள் பாடல்களை மக்கள் ரசிக்கிறார்கள். ஆனால் எங்களது பெயர்கூட பெரியளவில் யாருக்கும் தெரியாது” என சொன்னது ஜஸ்டின் பிரபாகரனுக்கும் பொருந்தும். சிறிய பட்ஜெட் திரைப்படங்களை முதலில் மக்களுக்கு அடையாளம் காண பாடல்கள்தான். அப்படிப்பட்டவரை இன்றுவரை பெரியளவில் கொண்டாடாமல் இருப்பதே அவரது அடையாளம் உள்ளது.


கடைசியாக விக்ரம் சுகுமாரன் இயக்கி சாந்தனு , கயல் ஆனந்தி, பிரபு, இளவரசு ஆகியவர்கள் நடித்து வெளியான ’இராவணக் கோட்டம்’ திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.