’பொன்னியின் செல்வன் 2’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘வீர ராஜ வீரா’ பாடலின் இசை நுணுக்கங்களையும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானையும் உச்சிமுகர்ந்து பாராட்டி இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தன் சமூக வலைதளப் பக்ககளில் பதிவிட்டுள்ளார்.


பொன்னியின் செல்வன்:


பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகத்தில் அமைந்திருந்த ஆறு பாடல்களும் சென்ற ஆண்டு நல்ல வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்த நிலையில், தற்போது பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் பாடல்கள் வெளியாகி இணையத்தில் வரவேற்பைப் பெற்று வருகின்றன. மொத்தம் ஏழு பாடல்கள் இந்தப் படத்தில் அமைந்துள்ள நிலையில், அருண்மொழி வர்மனுக்காக இயற்றப்பட்ட ’வீர ராஜ வீரா’ பாடல் ஏ.ஆர்.ரஹ்மானின் வழக்கமான முத்திரையுடன் ரசிகர்களின் பாராட்டுகளை அள்ளி வருகிறது.


வீர ராஜ வீரா பாடல்


அந்த வகையில் தற்போது இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் வீர ராஜ வீரா பாடலைப் பாராட்டி தன் இணையப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தன்னுடைய பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது: 


இந்தியத் திரைப்படப் பாடல்களைப் பொறுத்த வரை அவற்றை ஒரு கண்ணோட்டத்தில் இரு வகைகளாகப் பிரிக்கலாம். சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, காலகாலமாய் இருக்கிற வடிவத்திற்குட்பட்டு, முன்னிசை, இடையிசைகளோடு, பல்லவி-சரணம் என்கிற அமைப்புகளோடு கட்டுக்கோப்பாய் உருவாக்கப்படுகிறப் பாடல்கள் ஒரு வகை.


கிட்டத்தட்ட அனைத்து இந்தியத் திரைப்படப் பாடல்களும் இந்த வகைதான். நம் மனதை ஊடுருவித் தங்கியிருக்கிற பல்லாயிரக்கணக்கானப் பாடல்கள் இதற்குள்தான் அடங்கும். இந்த வகைப் பாடல்களை,  நுணுக்கங்களுடன் வடிவமைத்து கலை நயத்துடன் நேர்த்தியாய் கட்டப்படுகிற ஒரு நல்ல கட்டடத்துக்கு (architectural beauty) இணையாகச் சொல்லலாம்.


சோதனை உருவாக்கம்


அந்தக் காலம் தொட்டு இந்தக் காலம் வரையுள்ள எல்லா இசையமைப்பாளர்களும் இந்தப் பிரிவில் சாதித்த/சாதிக்கிறவர்கள்தான். எந்தக் குறிப்பிட்ட வடிவத்துக்குள்ளும் அடங்காத, இயற்கையில் உருவாகிற மலைகள், நதிகள், சோலைகள் அடங்கிய ஒரு இயற்கைக் காட்சியைப் போன்றது அடுத்த வகை. Free-flowing natural splendor (சுதந்திரமாகப் பாயும் இயற்கை அழகு). ரஹ்மான் மட்டுமே இந்தப் பிரிவிற்குள்ளும் இருப்பார். 


முதல் பிரிவில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது. ஆனால், எல்லாரும் இந்தப் பிரிவிற்குள் சேர்க்கப்பட முடியாது. இயல்பாய் தாந்தோன்றித்தனமாய் உருவாகும் ஒரு அமைப்பு இது. கொஞ்சம் சோதனை உருவாக்கம் என்றுகூடச் சொல்லலாம். பெரும்பாலான சமயங்களில் இறுதி பயன்பாட்டாளரைச் சென்று சேராமல் கூடப் போய்விடலாம்.


அசாதாரணம்... ஆழ்ந்த நுணுக்கங்கள், தமிழர்களின் பெருமை


ஜனரஞ்சகமான திரைப்படத் தொழிற்சாலைக்குள் துணிவுடன் இந்த வகைப் பாடல்களை நிறைய செய்து பார்த்தவர் ரஹ்மான் மட்டுமே. ஒரு சிலர் ஓரிரண்டு முறை முயற்சித்திருக்கலாம். ஆனால், விடாப்பிடியாக இந்தப் பாணியை தொடக்கத்திலிருந்து இன்றுவரை கடைபிடித்து அதில் கோலோச்சி, இந்தியத் திரைப்படப் பாடலை இன்னொரு பரிமாணத்திற்கு அழைத்துச் சென்றவர்/செல்பவர் ரஹ்மான்.


கொஞ்சம் குழப்பமாக இருக்கலாம். இதற்குச் சரியான எடுத்துக்காட்டுதான் 'பொன்னியின் செல்வன் - 2' படத்தில் அவர் உருவாக்கியிருக்கிற 'வீரா ராஜ வீர சூரா' என்கிற பாடல். அதன் நுணுக்கங்களை விவரிக்க வேண்டுமென்றால் இன்னொரு தொகுப்பு எழுதவேண்டும். எழுதுவேன். அடுத்தத் தலைமுறை இசையமைப்பாளர்களுக்குப் பயன்படும். 


இப்படியொரு படத்துக்கு, இப்படியொரு அசாதாரண வடிவில், புலனாகாத ஒரு அமைப்பில், இசையின் ஆழ்ந்த நுணுக்கங்களோடு, இந்திய-மேற்கத்திய இசை வித்தைகளை அனாயாசமாகக் குழைத்து, சொற்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அசத்தியிருக்கும் ரஹ்மான் ஒரு phenomenon. தமிழர்களின் பெருமை
மணிரத்னம் ஐயா! உங்களுக்கு எங்கள் நன்றியும் வாழ்த்துகளும்!” என ஜேம்ஸ் வசந்தன் பதிவிட்டுள்ளார்.