தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள கார்த்தி இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 


அடையாளத்தை அழித்த கார்த்தி


கடந்த 2007 ஆம் ஆண்டு அமீரின் இயக்கத்தில் பருத்தி வீரன் படம் வெளியாகியிருந்தது. தியேட்டர் எங்கும் தோரணங்கள், பேனர்கள் என அமர்க்களமாக இடம் பெற்றிருந்தது. முறுக்கு மீசை, அடந்த தாடி, நெற்றியில் பட்டை என அமர்க்களமாக எண்ட்ரீ கொடுத்திருப்பார் கார்த்தி. நடிகர் சிவகுமாரின் இளையமகன், நடிகர் சூர்யாவின் தம்பி என்ற அடையாளத்தோடு அறிமுகமான கார்த்தி, முதல் படத்திலேயே அந்த அடையாளத்தை ரசிகர்கள் மறக்கும்படி அட்டகாசமான நடிப்பை வழங்கியிருந்தார். 


1977 ஆம் ஆண்டு மே 25 ஆம் தேதி பிறந்த கார்த்தி, அமெரிக்காவில்  கம்யூட்டர் முன் அமர்ந்து கிராஃபிக் டிசைனிங் செய்துகொண்டிருந்தார். மறுபக்கம் திரைப்படம் தொடர்பான படிப்புகளையும் கற்றுத் தேர்ந்தார். ‘தான் நடிக்க விரும்புவதாக சிவகுமாரிடம் சொல்கிறார். அவரோ சரியான படம் கிடைக்கும் வரை காத்திருக்க சொல்கிறார்’ . அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பியது கையோடு இயக்குநர் மணிரத்னத்தை சந்தித்து உதவி இயக்குநராக சேர்கிறார். 


உதவி இயக்குநர் டூ நடிகர் 


ஆயுத எழுத்து படத்தில் உதவி இயக்குனராக வேலை பார்த்தார் கார்த்தி. அந்த படத்தில் ஒரு காட்சியில் கூட வருவார்.  இயக்குநராக வேண்டுமென நினைத்த கார்த்திக்கு நடிக்கும் வாய்ப்புகள் தேடி வந்தது. பருத்தி வீரனை தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு ஆயிரத்தில் ஒருவன் வெளியானது. செல்வராகவன் இயக்கிய இப்படத்தில் கார்த்தி நடிப்பில் மிரட்டியிருந்தார். இதனைத் தொடர்ந்து ‘பையா’ படத்தின் மூலம் கமர்ஷியல் ஹீரோவாக மாறத் தொடங்கினார். 


நடிக்க வந்த காலக்கட்டத்தில் ஆர்ட், கமர்ஷியல் என இருவகை சினிமாவிலும் கார்த்தியால் நடிக்க முடிந்தது கோலிவுட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இன்றும் கிராமமோ, நகரத்து கேரக்டர்களோ கார்த்தியால் அதில் எளிதாக பொருந்த முடியும் என்பது அவருக்கான பிளஸ் பாய்ண்ட். இப்படித்தான் டபுள் ஆக்‌ஷனில் ‘சிறுத்தை’ படத்தை கொடுத்தார். 


ஆனால் பரமபத விளையாட்டுப் போல் அடுத்த 3 ஆண்டுகள் கார்த்திக்கு இறங்குமுகமாக அமைந்தது. ஆன் இன் ஆல் அழகுராஜா, அலெக்ஸ் பாண்டியன், சகுனி, பிரியாணி என அடுத்தடுத்து தோல்வி படங்கள். பின்னர் 2014 ஆம் ஆண்டு பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘மெட்ராஸ்’ படம் மூலம் மீண்டு வந்தார். சுதாரித்துக் கொண்ட கார்த்தி இந்த படத்துக்கு கதைத்தேர்வில் அதிகம் கவனம் செலுத்த தொடங்கினார். 


மேக்ஸிமம் கியாரண்டி ஹீரோ


அதன்மூலம் தோழா, கொம்பன், கடைக்குட்டி சிங்கம், தீரன் அதிகாரம் ஒன்று, கைதி, சர்தார், பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 என பேமிலி ஆடியன்ஸூம் ரசிக்கும் வகையில் படங்களை கொடுக்க ஆரம்பித்தார். நடுவில் காஸ்மோரா, காற்று வெளியிடை, தேவ், தம்பி என சில சறுக்கலையும் கார்த்தி சந்தித்தார். ஆனால் “மேக்ஸிமம் கியாரண்டி ஹீரோ” என்ற பெயரை தனது படங்கள் மூலம் திரையுலகில் பதிய வைத்தார். கார்த்தியை பொறுத்தவரை தனது முதல் 21 படங்களில் 21 இயக்குநர்களுடன் பணியாற்றினார்.  பொன்னியின் செல்வன் மற்றும் விருமன் படங்களின் மூலம் அந்த கொள்கையையும் உடைத்தார்.  


தொடர்ந்து நடிப்புக்கு முக்கியத்தும் கொடுக்கும் கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் கார்த்தி அதனை என்றைக்கும் தொடர வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கார்த்தி...!