திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளி மாணவன், சக மாணவர்களால் வெட்டப்பட்ட சம்பவத்தில் நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ்குமார் ஆவேசமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சாதிகள் இல்லையடி பாப்பா என சொல்லிக்கொடுக்கும் கல்வி நிலையங்களில் சாதிய பாகுபாடு பார்க்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இது அடிமைத்தனத்தில் தொடங்கி குற்றச்சம்பவங்கள் வரை நீண்டுக் கொண்டே செல்கிறது. இதுகுறித்து எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவம் தமிழ்நாடு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அங்குள்ள நாங்குநேரி பகுதியில் முனியான்டி என்ற கூலித் தொழிலாளி தனது மனைவி அம்பிகா, மகன் சின்னத்திரை, மகள் சந்திர செல்வி ஆகியோரோடு வசித்து வந்தார். சின்னத்துரை வள்ளியூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதே பள்ளியில் நாங்குநேரியைச் சேர்ந்த சில மாணவர்களும் படிக்கிறார்கள். அந்த மாணவர்கள் சின்னத்துரையிடம் சாதிய ரீதியான அதிகாரங்களை காட்டியதாக சொல்லப்படுகிறது. இதனால் அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டதாகவும், சின்னத்துரை பள்ளிக்கு போகாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இப்படியான நிலையில் சின்னத்துரை பள்ளிக்கு போகாமல் இருந்துள்ளார். பின்னர் ஒருவாரம் கழித்து மீண்டும் பள்ளிக்கு சென்ற நிலையில், ஆசிரியரிடம் அவர், அந்த மாணவர்கள் தாக்குதல் நடத்தியது குறித்து தெரிவிக்க, அவர்கள் அனைவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மீண்டும் சின்னத்துரைக்கும், அந்த மாணவர்களுக்கும் இடையே விரோதம் ஏற்பட்டுள்ளது.
இப்படியான நிலையில் நேற்று இரவு சின்னத்துரை வீட்டுக்குள் புகுந்த மாணவர்கள் அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். தடுக்க வந்த தங்கைக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. பேரன் வெட்டப்பட்ட சம்பவத்தை கேள்விப்பட்ட தாத்தா கிருஷ்ணன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் 6 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ்குமார் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ”தம்பி சின்னத்துரை விரைவில் குணமடைய வேண்டுகிறேன். சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும்” என தெரிவித்துள்ளார்.