இசையமைப்பாளர், நடிகர் என கோலிவுட்டில் படு பிஸியா இருந்து வருபவர் ஜி.வி.பிரகாஷ். முதன்முதலாக ‘வெயில்’ படத்தின்மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி, அதன்பிறகு ‘டார்லிங்’ திரைப்படம் மூலம் கதாநாயகனாக வலம் வர தொடங்கினார். 


இவர் திரைப்படத்தில் மட்டுமல்லாது நிஜ வாழ்க்கையிலும் பல்வேறு நிகழ்வுகளில் உதவியதன்மூலம் கதாநாயகனாக உருவெடுத்தார். ஜல்லிக்கட்டு போராட்டம், நீட் தேர்வு, சமூக சார்ந்த பல நிகழ்வுகளுக்கு முதல் ஆளாய் குரல் கொடுக்கும் இவர், எந்தவொரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இல்லாதவர்கள் உதவி செய்து வருகிறார். ஒரு புறம் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் ஜிவி பிரகாஷ் சம்பாரிக்கும் பணத்தை, உதவி என்று கேட்கும் மக்களுக்கு உதவி வருகிறார். 


அந்தவகையில், நேற்று இசையமைப்பாளர் ஜி.பி. பிரகாஷ்குமார் எக்ஸ் பக்கத்தை ட்வீட் செய்த ‘BOMB' என்ற பயனர் தனக்கு உதவி வேண்டும் என கேட்டுள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்ட போஸ்ட்டில், “ஆன்லைன்ல பண உதவி கேக்குறதுக்கு பயமா இருக்கு.. இருந்தாலும் கேக்குறேன். என் அக்கா பையனுக்கு (1 வயசு) சிறு மூளை பக்கத்துல கட்டி இருக்குன்னு சொல்றாங்க. கொஞ்சம் பயமா தான் இருக்கு.. நேத்து நைட்டு இராம்நாட்ல இருந்து மதுரை Appollo ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போனோம்.. அவங்க என்னன்னா உடனே” என பதிவிட்டுள்ளார். 






எப்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஜி.வி.பிரகாஷ், இந்த பதிவை பார்த்துள்ளார். தொடர்ந்து, அந்த நபரை தொடர்பு கொண்டு ரூ. 75 ஆயிரம் பணத்தையும் அவரது ஜி பே நம்பருக்கு அனுப்பியுள்ளார். தொடர்ந்து, தான் அனுப்பிய பணத்திற்கான ஸ்கீரின் ஷாட்டை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ஜி.வி.பிரகாஷ் குமார், “என்னால் முடிந்த ஒரு சிறிய உதவி” என குறிப்பிட்டுள்ளார். 






தற்போது இதை பார்த்த நெட்டிசன்கள் இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷை எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பாராட்டி வருகின்றனர். 


ஜி.வி.பிரகாஷ் தெரியாமல் செய்யும் பல நல்ல விஷயங்கள்:


எந்த ஒரு விளம்பரமும் இன்றி ஜி.வி. பிரகாஷ் பல்வேறு நல்ல காரியங்களை செய்து வருகிறார். அதிலும், முக்கியமாக அரசு பள்ளிகளில் மிகவும் தேவையான ஒன்று வகுப்பறைகளும், கழிப்பறைகளும்.. பல பள்ளிகளில் வகுப்பறைகள் இருந்தாலும் கழிப்பறைகள் இல்லை. இதை அறிந்துகொண்ட அவர் பல பள்ளிகளுக்கு கழிவறை அமைத்து கொடுத்துள்ளார். 


தொடர்ந்து, மலைவாழ் மற்றும் பழங்குடியின மக்களின் குழந்தைகள் படிக்கவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. பல சினிமா பிரபலங்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை தாங்கள் செய்யும் ஒவ்வொரு நல்ல விஷயங்களை சமூக வலைதளங்களில் போட்டு பெரியதாக காட்டி கொள்வர். அப்படி இருக்க இவர் செய்த சில விஷயங்கள் வெளியே தெரியாமல் இருப்பது ஆச்சர்யத்தை தருகிறது.