இசையமைக்க வந்த புதிதில் தனக்கு நடந்த எளிதில் மறக்க முடியாத சம்பவம் குறித்து தேவா நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


தமிழ் சினிமா ரசிகர்களால் ‘தேனிசைத் தென்றல்’ என்ற அடைமொழியோடு அன்போடு அழைக்கப்படுபவர் தேவா. ரஜினி, கமல் தொடங்கி விஜய், அஜித், தனுஷ் வரை தன்னுடைய இசையால் அவர்களின் படங்களை அலங்கரித்தவர். தேவா என்றாலே கானா பாட்டு தான் பலருக்கும் நியாபகம் வரும். இப்போது பெரிய அளவில் படங்களுக்கு இசையமைக்கவில்லை என்றாலும், பலரும் அவர் தான் இசையமைத்தார் என்பதே தெரியாமல் தேவாவின் பாடல்களை வளரும் காலங்களில் ரசித்து கொண்டிருக்கிறோம். 


இப்படியான நிலையில் தேவா நேர்காணல் ஒன்றில் தனக்கு நடந்த  மிக மறக்க முடியாத சம்பவம் குறித்து பேசியுள்ளார். அதில், “நான் இசையமைக்க வந்த புதிதில், யூனியன் ஸ்ட்ரைக் நடந்தது. அப்போது தேவா என்றால் யாருக்கும் தெரியாது. ஸ்ட்ரைக் நடந்த அன்று ரெக்கார்டிங் வைக்கக்கூடாது என யாரும் என்னிடம் சொல்லவில்லை. அதனால் நானும்,பாடகி ஸ்வர்ணலதாவும் பாடல் பதிவு செய்ய வந்து விட்டோம்.


பணிகள் நடந்து கொண்டிருந்தபோது, யூனியனில் இருந்து உருட்டுக்கட்டைகள், வாள் எல்லாம் எடுத்துக் கொண்டு என் முன்னாடியே ஸ்டூடியோவுக்குள் செல்கிறார்கள். “‘எவன்டா அது தேவா’.. ரெக்கார்ட் வைக்ககூடாது தெரிஞ்சும் வச்சா என்ன அர்த்தம்?” என கேட்டுக் கொண்டே உள்ளே போக, நான் இதுதான் சமயம் என தப்பித்தேன் பிழைத்தேன் என மாடியில் உள்ள புரொஜக்டர் ரூமுக்குள் போய் ஒளிந்து கொள்ள சென்றேன். அங்கே போய் பார்த்தால் எனக்கு முன்னால் ஸ்வர்ணலதா ஒளிந்து கொண்டிருக்கிறார். 


என்னை தேடி பார்த்துவிட்டு ஆள் எஸ்கேப் ஆகிவிட்டார் என சொல்லிக் கொண்டே யூனியன் ஆட்கள் கிளம்பி சென்றதை நான் மாடியில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். பின்னர், தம்பி சபேசனை அனுப்பி யூனியனில் சென்று “தெரியாமல் நடந்து விட்டது, இனி இப்படி நடக்காது” என சொல்லி மன்னிப்பு கேட்ட பிறகு இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது. அப்பவும் தேவா என்றால் யாருக்கும் தெரியாமல், சபேசனை தேவா என நினைத்து விட்டார்கள். 


இதற்கு அடுத்த ஆண்டு அதே நாள்  கோடம்பாக்கம் ராகவேந்திரா கல்யாண மண்டபம் எதிரே ஒரு லாட்ஜ் உள்ளது. அங்கே ஒரு படத்துக்கான கம்போஸிங் நடந்து கொண்டிருந்தது. அப்போது யூனியன் ஸ்ட்ரைக் நடந்தது. அந்த வழியாக சென்று கொண்டிருந்த சங்கத்தின் ஆள் ஒருவர், ஆர்மோனியம் சவுண்ட் கேட்டு மேலே வந்து என்னைப் பார்த்தார்.


“ஏன் பா போன வருஷமும் இப்படித்தான் பண்ணிங்க, இந்த வருஷமும் இப்படி பண்றீங்களே...” என கேட்டு விட்டு எல்லாத்தையும் எடுத்துவிட்டு செல்ல சொன்னார்” எனப் பேசியுள்ளார். யூனியன் ஆட்கள், ஸ்ட்ரைக் பற்றிய தேவாவின் இந்த நேர்க்காணல் அவரது ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.