இசையமைப்பாளர் டி.இமான் உலகளாவிய புகழ் கொண்டிருக்கும் இந்திய நடிகை ப்ரியங்கா சோப்ரா ஜோனஸின் பழைய புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். ப்ரியங்கா சோப்ராவின் தொடக்க காலத் திரைப் பயணத்தின் போது எடுக்கப்பட்ட இந்தப் படம் தற்போது வைரலாகி வருகிறது. ப்ரியங்கா சோப்ரா ஜோனஸ் தற்போது சர்வதேச திரைப்படங்களிலும், இசை ஆல்பங்களிலும் நடித்து வரும் நிலையில், அவரது தொடக்க காலம் சென்னையின் சின்ன ஸ்டூடியோ ஒன்றில் தொடங்கியதை அவரது ரசிகர்கள் பிரமிப்புடன் பார்த்து வருகின்றனர். 


ட்விட்டர் பதிவு ஒன்றில், இசையமைப்பாளர் டி.இமான் ப்ரியங்கா சோப்ராவுடன் ஸ்டுடியோ ஒன்றில் இருப்பது போன்ற படத்தை வெளியிட்டு, “பழைய நினைவுகளை அளிக்கும் படம் இது! இருபது ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் படம் எடுக்கப்பட்டது. விஜய் அண்ணா நடிப்பில், நான் அறிமுகமான திரைப்படம் ’தமிழன்’. ப்ரியங்கா சோப்ராவும் முதன்முதலாகத் தனது பாடலை இங்கு பாடினார்” என்று குறிப்பிட்டுள்ளார். 



தமிழன்


 






2002ஆம் ஆண்டு வெளியான ‘தமிழன்’ படத்தில் இசையமைப்பாளர் டி.இமான் அறிமுகமானார். நடிகர்கள் விஜய், ப்ரியங்கா சோப்ரா ஜோனஸ் முதலானோர் நடித்த இந்தப் படத்தை இயக்குநர் மஜித் இயக்கினார். இதன் திரைக்கதை நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் எழுதியது. ’தமிழன்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமான ப்ரியங்கா சோப்ரா ஜோனஸ், இதில் ‘உள்ளத்தைக் கிள்ளாதே’ என்ற பாடலைப் பாடி, பாடகராகவும் அறிமுகமானார். ப்ரியங்கா சோப்ரா ஜோனஸ் நடித்த இந்தி மொழி அல்லாத ஒரே இந்தியத் திரைப்படம், ‘தமிழன்’. இந்தப் படத்திற்குப் பிறகு, 2003ஆம் ஆண்டு பாலிவுட்டில் The Hero: Love Story of a Spy என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி, வெற்றிகரமான நாயகியாக உருவெடுத்தார். கடந்த 2012ஆம் ஆண்டு, அவரது முதல் சிங்கிள் In my city வெளியாகி, அவரைப் பாடகியாகவும் புதிய பரிணாமத்தை அளித்தது. 


 


தனது வாழ்க்கை வரலாறு குறித்த Unfinished என்ற புத்தகத்தில், ப்ரியங்கா சோப்ரா ஜோனஸ் தனது தொடக்க கால நாட்களைக் குறித்து எழுதியுள்ளார். நியூயார்க் நகரத்தில் Quantico என்ற தொடரின் படப்பிடிப்பின் போது தன்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள ரசிகர்கள் குவிந்ததாகவும், அப்போது அவரது தொடக்க காலத்தின் போது நடிகர் விஜய் சொன்ன அறிவுரை நினைவுக்கு வந்ததாகவும் எழுதியுள்ளார்.



டி.இமான் - ப்ரியங்கா சோப்ரா ஜோனஸ்


 


”எனது மதிய உணவு இடைவேளையின் போது, ஒவ்வொரு ரசிகருடனும் நின்று படம் எடுத்துக் கொண்டேன். அப்போது என்னுடன் நடித்த முதல் சக நடிகரான விஜய் அவர்களையும், அவர் எனக்கு ஓர் முன்னுதாரணமாகச் செயல்பட்டதையும் நினைவுகூர்ந்தேன்” என்று அந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் ப்ரியங்கா.


இசையமைப்பாளர் டி.இமான் இசையில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ‘அண்ணாத்தே’ திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.