இந்தியாவில் 28.9 சதவீதம் குழந்தைகள் பாலியல் சீண்டலுக்கு உள்ளாவதாக யுவன் ஷங்கர் ராஜா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.


அதிர்ச்சி ஏற்படுத்திய அடுத்தடுத்த குற்றங்கள்


சமீபத்தில் பிரேஸில் நாட்டுப் பெண் ஒருவர் ஜார்கண்ட் மாநிலத்தில் நான்கு நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதனைத் தொடர்ந்து புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப் பட்ட  நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்துடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தும் இந்த நிகழ்வுகள் பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளன.


பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவது  பெண்களுக்கு பாதுகாப்பற்ற ஒரு நாடாக இந்தியா மாறி வருகிறதா என்கிற கேள்வி எழுந்துள்ளது. இப்படியான சம்பவங்களைத் தவிர்க்க அரசு புதிய சட்டதிட்டங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கோரிக்கை எழுந்து வருகின்றன. இது தொடர்பாக பல்வேறு முக்கிய பிரமுகர்கள் தங்களது கண்டனங்களைத் தெரிவித்திருந்தார்கள்.


இப்படியான நிலையில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது எக்ஸ் தளத்தில் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். மேலும் புதுச்சேரியில் சிறுமி கொலை செய்யப்பட்ட நிகழ்வு குறித்து தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார் அவர்.


பாதுகாப்பான ஒரு சமூகமாக நான் உருவாக வேண்டும்






இந்தியாவில் 28.9 சதவீதம் குழந்தைகள் ஏதோ ஒரு வகையில் பாலியல் சீண்டலுக்கு உள்ளாவதாக அவர் தெரிவித்துள்ளார்.  நம் குழந்தைகளுக்கு குட் டச் , பேட் டச் என்பதை சொல்லிக் கொடுப்பதுடன் பல்வீனமானவர்களை பாதுகாக்கும் பண்புகளை சிறு வயதில் இருந்தே விதைக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். புதுச்சேரியில் இந்த கொடூரமான குற்றத்தை செய்த இளைஞர்கள் போதைப் பொருட்களை உட்கொண்டிருந்தது நாம் ஒன்றல்ல பல்வேறு விதமான தீமைகளை எதிர்கொள்வதை உணர்த்துகிறது என்று அவர் கூறியுள்ளார். ஒரு பாதுகாப்பான சமூதாயமாகவும் நாடாகவும் நான் வளர வேண்டும் என்று யுவன் ஷங்கர் ராஜா கூறியுள்ளார்.


ஜெயம் ரவி ஆவேசம்






யுவன் ஷங்கர் ராஜாவைத் தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி தனது எக்ஸ் தளத்தில் “ அந்த மிருகங்களை தூக்கிலிடுங்கள் “ என்று பதிவிட்டுள்ளார்