இளையராஜா வைரமுத்து மோதல்


இசையமைப்பாளர் இளையாராஜாவின் பாடல்களின் காப்புரிமை தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தான் இசையமைத்த பாடல்களுக்கான காப்புரிமை மொத்தமும் தனக்கே சொந்தமானவை என்பது இளையராஜாவின் நிலைப்பாடாக இருக்கிறது. இது தொடர்பாக சமீபத்தில் வைரமுத்து நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவித்திருந்தார்.


அதில் அவர் “இசை பெரிதா பாடல்கள் பெரிதா என்கிற விவாதம் தற்போது தமிழ் சினிமாவில் எழுந்துள்ளது. இசையும் பாடல் வரிகளும் இணைந்துதான் நல்ல பாடல் வரிகள் உருவாகும் . ஆனால் சில சமயங்களில் இசையைவிட பாடல் வரிகள் சிறந்ததாக திகழும் சந்தர்ப்பங்களும் உண்டு , இதை புரிந்துகொண்டவர் ஞானி புரிந்துகொள்ளாதவன் அஞ்ஞானி “ என்று வைரமுத்து பேசியிருந்தார். 


கங்கை அமரன் ஆவேசம்


வைரமுத்துவின் பேச்சு இளையராஜாவின் ரசிகர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. இதுதொடர்பாக இளையராஜாவின் சகோதரர் இசையமைப்பாளர் கங்கை அமரன் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர் வைரமுத்துவை கடுமையாக சாடியுள்ளார்


இந்த வீடியோவில் “ எங்களால் மேலே வந்தவர் வைரமுத்து. வந்த இடத்தையே காலில் போட்டு மிதிப்பது போல் பேட்டி கொடுத்துள்ளார். அவரது பாடல்களுக்கு அதிக புகழ் கிடைத்ததால் கர்வம் தலைக்கேறிவிட்டது . இளையராஜா சொல்லவில்லை என்றால் பாரதிராஜா வைரமுத்துவை ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார். அதை எல்லாம் யோசித்து பார்த்திருந்தால் அவர் அப்படி பேட்டி கொடுத்திருக்க மாட்டார். வைரமுத்து நன்றாக எழுதுகிறார் என்பதை இளையராஜாதான் ஏற்றுக் கொண்டார். அவர் இல்லை என்றால் இன்று வைரமுத்துவின் எதிர்காலம் ஜீரோவாக தான் இருந்திருக்கும்   அடக்கி வைக்க ஆள் இல்லாததால் துள்ளிக் கொண்டிருக்கிறார் வைரமுத்து.


இளையராஜாவின் ஃபோட்டோவை வைத்து வைரமுத்து வணங்க வேண்டும் , இளையராஜா இல்லையென்றால் வைரமுத்து என்கிற பெயரே இருந்திருக்காது. 






நான் வைரமுத்துவுக்கு சவால் விடுகிறேன். நீங்கள் எழுதி இளையராஜா இசையமைத்த பாடல்களை வேறு ஒரு இசையமைப்பாளரிடம் கொடுத்து பாருங்கள். அது முடியாது. இளையராஜாவின் இசை இல்லாமல் அது முடியாது. தன்னைத் தானே புகழ்ந்துகொண்டு இருக்கக் கூடிய கவிஞர் யார் இருக்கிறார். தான் பெரிது என்று வைரமுத்து சொல்லிக் கொண்டிருக்கிறார். இனிமேல் இளையராஜாவைப் பற்றி குற்றமோ குறையோ சொல்வதாக இருந்தால் அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும்” என்று கங்கை அமரன் பேசியுள்ளார்.