சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து பேசினார்.
என்ன பேசினார் ராகுல் காந்தி..?
ராகுல் காந்தி பேசியதாவது, “இந்த மக்களவை தேர்தல் அரசியல் சாசனம், ஜனநாயகம், இடஒதுக்கீடு ஆகியவற்றை காப்பாற்றும் தேர்தல். இந்த போராட்டம் கருத்தியல் போராட்டம். ஒரு பக்கம் காங்கிரஸ் கட்சியும் இந்திய கூட்டணியும் - மற்றொரு பக்கம் பாஜக.
இந்த தேர்தல் அரசியல் சாசனத்துக்கான தேர்தல். அரசியல் சாசனத்தை காப்பாற்றும் தேர்தல் என்பதை இப்போது மக்கள் புரிந்து கொண்டனர். பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் அரசியலமைப்பு சட்டத்தை ஒழிக்க விரும்புகிறார்கள். அதை முற்றிலும் மாற்ற விரும்புகிறார்கள். மற்றொரு பக்கம் காங்கிரஸ் அதை காப்பாற்ற முயற்சிக்கிறது.
அரசியலமைப்பு சட்டத்தை கிழித்து எறிய நினைக்கிறது பாஜக:
இது உலகிலேயே மிகப்பெரிய அரசியலமைப்பு. இந்த அரசியலமைப்பு ஒரு புத்தகம் மட்டுமல்ல. இது இந்த நாட்டில் உள்ள ஏழைகளுக்கு அதிகாரம் அளிக்கிறது. ஏழைகளில் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு, இந்திய நாட்டில் அவர்களின் வாழ்க்கை முறையை பாதுக்காக்கிறது. அதை கிழித்து எறிய வேண்டும் என்று பாஜக நினைக்கிறது.
எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் அரசியல் சாசனத்தை ஒழிப்போம் என்றும், இடஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்றும் பாஜக தலைவர்கள் பலரும் கூறுகின்றனர். இடஒதுக்கீடு என்பது அரசியல் சாசனத்தில் இருந்து வந்தது. பொதுத்துறை என்பது அரசியல் சாசனத்தில் இருந்து வந்தது. உங்கள் உரிமைகளும் அரசியலமைப்பில் இருந்தே வந்தது. அரசியலமைப்பு சட்டம் இதையெல்லாம் வழங்கியுள்ளது. அது இல்லாமல் போனால் பழங்குடியினரின் நீர், காடுகள், நிலம், வாழ்க்கை முறை மற்றும் மொழிகள் அழிந்துவிடும்.
இடஒதுக்கீடு என்பது ஒரு சிந்தனை:
இடஒதுக்கீடு என்பது ஒரு சிந்தனை. இடஒதுக்கீடு என்பது இந்தியாவின் பிற்படுத்தப்பட்ட மக்கள், தலித்துகள் மற்றும் பழங்குடியினர் நாட்டின் பங்கு என்பதாகும். ஒப்பந்த முறையை அமல்படுத்தும்போது இடஒதுக்கீட்டை நிறுத்துகிறார்கள். அக்னிவீர் போன்ற திட்டத்தை கொண்டு வரும்போது இடஒதுக்கீடு என்பது காணாமல் போய்விடும்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “எந்த பொதுத்துறை நிறுவனத்தையும் தனியார் மயமாக்க மாட்டோம் என, பா.ஜ., தலைவர்களுக்கு சவால் விடுகிறார். பாஜகவின் சித்தாந்தம் மகாத்மா காந்தி, நேரு அல்லது அம்பேத்கரின் சித்தாந்தம் அல்ல என்றும், அதானி, அம்பானி போன்ற தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை ஆதரிப்பதே அவர்களின் சித்தாந்தம். 70 கோடி இந்தியர்களுக்கு சமமான சொத்து 22 பேரிடம் மட்டுமே உள்ளது. இந்தியாவின் ஒரு சதவீத மக்கள் நாட்டின் 40 சதவீத செல்வத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இது நரேந்திர மோடியின் பங்களிப்பு.
மத்தியில் காங்கிரஸ் மற்றும் 'இந்தியா' கூட்டணி ஆட்சிக்கு வந்தால், நாட்டில் உள்ள ஏழை குடும்பங்களின் பட்டியலை தயாரித்து, மகாலட்சுமி திட்டத்தின் கீழ், ஒரு பெண்ணின் கணக்கிற்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் அனுப்பப்படும். இளைஞர்களின் வேலையின்மை விகிதம் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்தியாவின் அனைத்து படித்த இளைஞர்களும் அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் ஒரு வருட பயிற்சி பெறுவார்கள் மற்றும் அவர்களின் கணக்கிற்கு ஆண்டு உதவித்தொகையாக ரூ.1 லட்சம் அனுப்பப்படும் இந்த திட்டம் மோடி ஜி உருவாக்கிய வேலையின்மை சுவரை உடைக்கும்.” என தெரிவித்தார்.