தனுஷுடன் ஒரு பாடலுக்கு இணைந்து வேலை செய்வது தனக்கு ரொம்ப பிடித்த ஒன்று என்று இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தெரிவித்துள்ளார்.


தனுஷ் - ஜி.வி பிரகாஷ் காம்போ


தனுஷ் மற்றும் ஜி.வி. பிரகாஷின் காம்போபவில் வந்த பாடல்கள் எப்போதும் ரசிகர்களிடம் தனி கவனம் பெறக்கூடியவை. ஆயிரத்தில் ஒருவன் படத்தில் உன் மேல ஆசதான். மயக்கம் என்ன, அசுரன், தற்போது வெளியாகியிருக்கும் கேப்டன் மில்லர் என ஜி.வி இசையில் தனுஷ் பாடிய பாடல்கள் எல்லாமே ஹிட் ஆகியிருக்கின்றன. ஒரு பாடலில் இணைந்து வேலை செய்யும்போது இருவருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி எப்படியானதாக இருக்கும் என்று சமீபத்தில் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் பகிர்ந்துகொண்டார்.


தனுஷ் எனக்கு செட்டு 


”தனுஷின் குரலுக்கு ஒரு ராவான தன்மை இருக்கிறது. அவருடன் வேலை செய்வது எப்போதுமே எனக்கு ரொம்ப பிடித்த ஒன்று. இடைப்பட்ட காலத்தில் தனுஷ் பாடுவதைதே நிறுத்திவிட்டார். அதனால்தான் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் அவரை நானும் செல்வ ராகவனும் சேர்ந்து உன் மேல ஆசதான் பாடலை பாட சம்மதிக்க வைத்தோம். இதற்கு பிறகு அவர் தொடர்ச்சியாக பாடத் தொடங்கினார். தனுஷும் நானும் சேர்ந்து ஒரு பாடலில் வேலை செய்தால் அவரும் நானும் நிறைய பேசிக்கொள்வோம். அவர் ஒரு வரி எழுதி அது ஒகேவா என்று கேட்பார். நான் அவருக்கு பிடிக்கவில்லை என்றால் வேற ஒன்றை முயற்சி செய்வேன். இப்போது இருக்கிற பாடகர்களுடன் எனக்கு அந்த கெமிஸ்ட்ரி கிடைப்பதில்லை. ஆனால் தனுஷுடன் வேலை செய்வது ஒரு பேட்ச்மேட்போல் உணர்வு ஏற்படும்” என்று அவர் கூறியுள்ளார்.


பிறை தேடும் இரவிலே


செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த மயக்கன் என்ன படத்தில் இடம்பெற்ற பிறை தேடும் இரவிலே பாடல் உருவான விதம் குறித்து ஜி.வி பிரகாஷ் குமார் பகிர்ந்துகொண்டார் “ மயக்கம் என்ன படத்தின் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தபோது, செல்வராகவன் எனக்கு ஃபோன் செய்தார். ஒரு பாட்டு எடுக்க இருப்பதாகவும் அதற்கு இசையமைத்து அனுப்பும்படி என்னிடம் கேட்டுக்கொண்டார்,  நான் நேரில் இருந்து இசையமைத்துக் கொடுத்தாலே அதை செல்வராகவன் மாற்றிவிடுவார் என்பதால், நான் முடியாது என்று அவரை நேரில் வர சொல்லிவிட்டேன். இந்த முறை நான் என்ன பாட்டு கொடுக்கிறேனோ அதில் எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே வைப்பதாக செல்வராகவன் வாக்கு கொடுத்தார்.


அந்த பாடலை தனுஷை எழுத வைப்பதாகவும் அவர் கூறினார். நான் பிறை தேடும் பாடலுக்கு மியூசிக் போட்டுக் கொடுத்தேன் , தனுஷ் முதல் முறையாக பாடல்வரிகள் எழுதுவதால் என்னை நேரில் அழைத்து அவர் எழுத எழுத என்னிடம் சரியாக இருக்கிறதா என்று கேட்டார். பிறை தேடும் இரவிலே பாடல் அப்படிதான் உருவானது” என்று ஜி .வி தெரிவித்துள்ளார்.