குட் பேட் அக்லி
அஜித் குமார் தற்போது குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். த்ரிஷா இல்லனா நயன்தாரா , மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்த ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்கி வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. கடந்த மே மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாதில் தொடங்கியது. பின் ஸ்பெயின் , பல்கேரியா உள்ளிட்ட நாடுகளில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 2025 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேவிஶ்ரீ பிர்சாத் நீக்கம்
குட் பேட் அக்லி படத்திற்கு முதலில் தேவிஶ்ரீ பிரசாத் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியானது. தற்போது திடீரென்று இப்படத்தில் இருந்து தேவிஶ்ரீ பிரசாத் நீக்கப்பட்டுள்ளார் . அவருக்கு பதிலாக ஜி.வி பிரகாஷ் குமார் இப்படத்தின் புதிய இசையமைப்பாளராக இணைந்துள்ளார். பாதி படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் ஏன் தேவிஶ்ரீ பிரசாத் படத்தில் இருந்து நீக்கப்பட்டார் என்கிற கேள்வி அனைவரிடமும் இருந்து வருகிறது. ஏற்கனவே தான் இசையமைத்த ட்யூன் ஒன்றை டி.எஸ்.பி படத்தில் பயண்படுத்தியதால் படத்தின் இசையமைப்பாளர் மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிருப்தியை வெளிப்படுத்திய டி.எஸ்.பி
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள மற்றொரு படம் புஷ்பா 2 . இப்படத்தின் பாடல்களுக்கு தேவிஶ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தாலும் பின்னணி இசையமைக்க வேறொரு இசையமைப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இரு படங்களில் இருந்து டி.எஸ்.பி விலகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புஷ்பா 2 படத்தின் 'கிஸ்ஸிக் ' பாடல் நேற்று சென்னையில் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத் மேடையில் அனைவர் முன் தனது தயாரிப்பாளர் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது தற்போது பேசு பொருளாகியுள்ளது
" தயாரிப்பாளர் ரவிக்கு என்மேல் அளவுகடந்த அன்பு இருக்கிறது. ஆனால் அன்பிற்கு மேல் அவருக்கு என்மேல் நிறைய புகார்கள் இருக்கின்றன. சரியான நேரத்தில் பாட்டு தருவதில்லை. பின்னணி இசை தருவதில்லை என அவருக்கு என்மேல் எப்போதும் நிறைய புகார்கள் இருந்துகொண்டு தான் இருக்கின்றன. இப்போது இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்து இருபதி நிமிடம் ஆகிவிட்டது. ஆனால் பாடல் போடும் போது நான் கேமராவில் என்ட்ரி கொடுக்கவில்லை என அவர் என்னிடம் சொனனர். அதற்கு நான் என்ன செய்ய முடியும் சார்" என தேவிஶ்ரீ பிரசாத் மேடையில் அனைவர் முன்னால் பேசியுள்ளது அதிர்ச்சியளித்துள்ளது.