தேசிய விருதுபெற்ற இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷுக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பியானோ ஒன்றைப் பரிசளித்துள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தேசிய விருது பெற்ற ஜி.வி.பிரகாஷ்:
கடந்த 2006 ஆம் ஆண்டு இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் வெளியான வெயில் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் இசையமைத்து தனக்கான இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளார். அதோடு நடிப்பிலும் ஜி.வி.பிரகாஷ் கலக்கி வருகிறார்.
அந்த வகையில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான வாத்தி திரைப்படத்திற்கும் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படத்திற்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதையும் மத்திய அரசு இவருக்கு வழங்கி கெளரவித்தது. அதேபோல், கடந்த முறை சூரரைப்போற்று திரைப்படத்தில் இசையமைத்ததற்கும் சிறந்த தேசிய விருது இவருக்கு கிடைத்தது.
பரிசு வழங்கிய ஏ.ஆர்.ரஹ்மான்:
இச்சூழலில் தான் இசையமைப்பாளார் ஏ.ஆர்.ரஹ்மான் பரிசு ஒன்றை வழங்கியுள்ளார். அதாவது ஒரு அழகான இசைக்கருவியை (பியானோ) வழங்கியிருக்கிறார். இது தொடர்பாக ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”இது எனக்குக் கிடைத்த மிகச்சிறந்த பரிசு. இது ரஹ்மான் பயன்படுத்திய பியானோ. இதைவிட வேறு என்ன சிறந்த பரிசை நான் கேட்டுவிட முடியும்” என்று கூறியுள்ளார்.
இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்களும் ஜி.வி.பிரகாஷுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவுகள் போட்டு வருகின்றனர். இதில் ஒரு ரசிகர், “ நீங்கள் இன்னும் பல விருதுகளை வாங்க வேண்டும். தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம் ஜி.வி. நீங்கள்”என்று கூறியுள்ளார்.