தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் கள உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசித் தேதி ஆகும்.
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில்(TANGEDCO) உள்ள 1,794 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி, ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வு (தொழிற்பயிற்சி நிலை - II) குறித்த அறிவிக்கையை வெளியிட்டது. இதன்படி கள உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும் தகுதியும் கொண்ட ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க இன்றே (அக்டோபர் 2ஆம் தேதி) கடைசி ஆகும்.
என்ன தகுதி?
தொழிற்கல்வி மற்றும் பயிற்சிக்கான தேசியக் குழுமத்தினால் வழங்கப்படும் பின்வரும் ஏதேனும் ஒரு தொழிற்பிரிவில் தேசிய தொழிற் சான்றிதழ் / தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்
மின்பணியாளர் அல்லது கம்பியாள் அல்லது சிறப்புத் திட்டத்தின் கீழ் மின்னியல் தொழிற்பிரிவு
மின்பணியாளர் அல்லது கம்பியாள் அல்லது மின்னியலில் தேசிய தொழிற்பயிற்சி சான்றிதழ் / தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ் பெறாமல் அதே பாடப்பிரிவில் உயர் கல்வித் தகுதி பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்க தகுதியற்றவர்களாவர்.
வயது வரம்பு
இப்பதவிக்கு 01.07.2025 தேதியின்படி, குறைந்தபட்சம் 18 வயது நிரம்பி இருக்க வேண்டும். அதிகப்படியாக பிசி, எம்பிசி பிரிவினர் 34 வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 37 வரையும் இருக்கலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு 44 வயது வரை தளர்வு உள்ளது. முன்னாள் ராணுவத்தினருக்கு 55 வரையும், கணவரை இழந்த பெண்களுக்கு 37 வரையும் தளர்வு உள்ளது. இதர பிரிவை சேர்ந்தவர்களுக்கு அதிகப்படியான வயது வரம்பு 32 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் எவ்வளவு?
தமிழ்நாடு அரசின் ஊதியத்தில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் நிலை 2 கீழ் ரூ.18,800 முதல் ரூ.59,900 வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு எப்படி?
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (தொழிற்பயிற்சி நிலை) - II, ஒரு படிநிலை எழுத்துத்தேர்வு உடையது. இணையவழி விண்ணப்பத்தில் கோரப்பட்ட உரிமைக்கோரல்களின் அடிப்படையில், தேர்வர் எழுத்துத் தேர்விற்கு அனுமதிக்கப்படுவர்.
தேர்வர்கள் எழுத்துத் தேர்வின் தாள் I மற்றும் தாள் II தேர்விலும் கலந்து கொள்வது கட்டாயமாகும். தாள் I மற்றும் தாள் II ஆகிய இரண்டிலும் கலந்து கொள்ளாத தேர்வர்கள் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களைப் பெற்றிருந்தாலும் கூட, தெரிவிற்கு கருதப்பட மாட்டார்கள்.
தரவரிசை எப்படி?
எழுத்துத் தேர்வில் தேர்வர்கள் பெற்ற மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதிப் பட்டியல் அல்லது தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும்.
எழுத்துத் தேர்வில் (தாள்-I-ல் பகுதி ஆ, பகுதி இ மற்றும் தாள்-II) தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் இறுதி தரவரிசையை தீர்மானிக்கும்.
கூடுதல் தகவல்களுக்கு: https://tnpsc.gov.in/Document/tamil/13_2025_CTS_II_DIPLOMA_TAMIL_.pdf என்ற அறிவிக்கையை க்ளிக் செய்து காணலாம்.