அனிருத்
திரைத்துறையைப் பொறுத்தவரை ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒரு இசையமைப்பாளர் உச்சத்திற்கு செல்வார். இளையராஜா , ஏ.ஆர் ரஹ்மான் , யுவன் ஷங்கர் ராஜா , ஹாரிஸ் ஜெயராஜ் , தேவா , வித்யாசாகர் என ஒவ்வொருவரும் குறிப்பிட்ட காலத்தில் உச்சத்தில் இருந்திருக்கிறார்கள். தற்சமயம் தமிழ் மட்டுமில்லாமல் இந்தி , தெலுங்கு என அனைத்து திரைத்துறையிலும் உச்சத்தில் இருப்பவர் அனிருத். ஒரே பாடலை மூன்று வெவ்வேற மொழிகளில் போட்டாலும் மூன்று பாடல்களும் ஹிட் அடிக்கின்றன. ரஜினி , கமல் , ஷாருக் கான் , ஜூனியர் என்.டி, ஆர் , விஜய் என அனைத்து மெகா ஸ்டார்களின் படங்களுக்கும் ஓய்வே இல்லாமல் அடுத்தடுத்து இசையமைத்து வருகிறார்.
தற்போதையை நிலைப்படி தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் இந்திய இசையமைப்பாளர்களில் அனிருத் முதலிடத்தில் உள்ளார். தற்போது அவர் இசையமைத்திருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் பாடல்களும் பெரியளவில் கொண்டாடப்பட்டு வருகின்றன.
10 மாதங்களில் 50 பாடல்கள்
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அனிருத் தான் அடுத்து இசையமைக்க இருக்கும் படங்களைப் பற்றிய தகவல்களை பகிர்ந்துகொண்டார். 2025 ஆம் ஆண்டு அஜித்தின் விடாமுயற்சி , ரஜினியின் கூலி மற்றும் ஷாருக் கான் நடிக்கும் படத்திற்கு இசையமைக்க இருப்பதாக அவர் தெரிவித்தார். இன்னும் சில படங்கள் இருப்பதாகவும் ஆனால் அதைப்பற்றி யோசித்தால் தனக்கு பைத்தியமே பிடித்துவிடும் என்று அவர் தெரிவித்தார். அடுத்த பத்து மாதங்களில் 50 பாடல்களுக்கு தான் இசையமைக்க வேண்டும் என அனிருத் தெரிவித்துள்ளார்.
10 மாதங்களில் 50 பாடல்கள் என்பது ஒரு அசாத்தியமான இலக்கு. இன்றைய தலைமுறையின் பல்ஸை கச்சிதமாக பிரதிபலிக்கும் வகையில் இருப்பதே அனிருத்தின் பாடல்கள் ஹிட் ஆவதற்கு முதன்மையான காரணங்கள் என கூறப்படுகிறது. இதில் சில பாடல்கள் மற்ற பாடல்களை தழுவியதாக இருப்பதாக பல்வேறு விமர்சனங்களும் அவர்மீது வைக்கப்படுகின்றன. ஆனால் இது அனிருத்தின் காலம். அவர் தொட்டதெல்லாம் தங்கம் தான் என்கிற போது யார் என்ன செய்துவிட முடியும்.