தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து, அந்த கதாபாத்திரத்திற்கு பலம் சேர்ப்பவர் மூணார் ரமேஷ். இவர் சமீபத்தில் வெளியாகிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் வெளியாகியுள்ள லால் சலாம் படத்தில் சிறப்பான குணச்சித்திர கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் இதற்கு முன்னர் தீண்ட தீண்ட, தலைநகரம், புதுப்பேட்டை, சிவாஜி, கிரீடம், பொல்லாதவன், பீமா, ஜெயம்கொண்டான், ஆடுகளம், வேட்டைக்காரன் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார். 


இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இதற்கு முன்னர் சிவாஜி படத்தில் நடித்திருந்தாலும், இவருக்கு மக்கள் மத்தியில் நன்கு வரவேற்பைப் பெற்றுக்கொடுத்த திரைப்படம் செல்வராகனவனின் இயக்கத்தில் வெளியான புதுப்பேட்டை திரைப்படம்தான். புதுப்பேட்டை படத்தில் இவர் தனுஷின் தந்தையாக நடித்திருப்பார். அந்த படத்தில் அவர் பேசிய வசனங்களான, அத உள்ள வை குமாரு, கடவுள் இருக்கான் குமாரு ஆகிய வசனங்கள் இன்றைக்கும் மீம் டெம்ளேட். 


மறைந்த இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான பாலுமகேந்திரா பட்டறையில் இருந்து வந்தவர் என்பதால் இயக்குநர் வெற்றிமாறனின் படத்தில் கட்டாயம் ஒரு கதாபாத்திரத்தில் இவர் நடித்துவிடுவார். வெற்றி மாறன் இயக்கிய பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை உள்ளிட்ட கடைசியாக வெளியான விடுதலை படத்திலும் நடித்துள்ளார். 


இவர் சமீபத்தில் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தான் ஒரு ரஜினி ரசிகர் எனவும் சிறுவயதில் ரஜினி ரசிகர் என்பதால் பள்ளியில் ஆசிரியர்களிடம் அடி வாங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அந்த பேட்டியில், “ நான் சிறுவயது முதலே தீவிரமான ரஜினி ரசிகன். நடந்தால் கூட ரஜினிபோலத்தான் நடப்பேன். அவரது காளி படத்தின் போஸ்டரை எனது பெரிய நேட்டின் அட்டையில் ஒட்டிக்கொள்வேன். ஆசியர்கள் இதற்காக என்னை அடித்துள்ளார்கள். அவர்கள் அடிக்கும்போது கை நீட்டச் சொல்வார்கள், அப்போது கூட நான் ரஜினிபோலத்தான் கையை நீட்டுவேன். 


ரஜினி நடிப்பில் மிகவும் பிடித்த படம் என்றால் அது ஜானி. நான் இளைஞனாக இருந்த போது எங்கள் ஊர் ரஜினி ரசிகர் மன்றத் தலைவன் நான்தான். என்னை எல்லோரும் அழைப்பதே ரஜினி ரசிகன் என்றுதான் அழைப்பார்கள். தளபதி படத்தை எத்தனை முறை பார்த்தேன் என்பதற்கு கணக்கே இல்லை. இன்றைக்கு நான் அவருடன் இரண்டு படங்களில் நடித்துள்ளேன்.  அவரது ஆன்மீகமும் எனக்கு பிடிக்கும்.


சாதி, மதங்களை விட்டுவிட்டால் நமது நாடு நன்றாக இருக்கும் என்பதைத்தான் லால் சலாம் படத்தில் கூறியுள்ளோம். பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது நான் சவுதி அரேபியாவில் வேலையில் இருந்தேன். மசூதி இடிக்கப்பட்டது அங்கும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தியாவில் இருந்து வந்து அங்கு வேலைக்கு வந்தவர்கள் பெரும் அவதியைச் சந்தித்தனர். ஒருமுறை நான் செய்யாத தவறுக்கு சிறைக்குச் சென்றேன். அப்போது என்னை எந்த நாடு எனக் கேட்டார்கள். அதற்கு, நான் இந்தியா எனக் கூறினேன். அதன் பின்னர் என்னை ஒரு பார்வை பார்த்துவிட்டு துப்பினார்கள்” எனக் கூறியுள்ளார்.