சின்னத்திரை ரசிகர்களின் எவர்க்ரீன் ஷோகளில் ஒன்று 'காஃபி வித் அனு' நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியை இன்று வரை நினைவுகளில் பிரெஷாக இருக்க முக்கியமான காரணம் அதன் தொகுப்பாளினியான அனுஹாசன்.
உலகநாயகன் கமல்ஹாசன் அண்ணன் மகள், நடிகை சுஹாசினியின் தங்கை, ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் சகோதரி, இயக்குனர் மணிரத்னம் மச்சினிச்சி இப்படி பல வகையில் அடையாளம் காணப்பட்டாலும் தனக்கென ஒரு தனி அடையாளம், அந்தஸ்து, விருப்பத்தின் மூலம் மக்கள் மத்தியில் தன்னை நிலைநிறுத்தி கொள்ளும் அனுஹாசன் பிறந்தநாள் இன்று.
திருச்சியில் பிறந்து வளர்ந்த அணு ஹாசன் முழு பெயர் அனுராதா சந்திரஹாசன். இந்தியாவின் மிகவும் பிரபலமான கல்லூரியான ராஜஸ்தானின் பிட்ஸ் பிலானியில் இயற்பியல் மற்றும் மேலாண்மையில் எம்.எஸ்.சி பட்டம் பெற்றார். அவருடைய தந்தை சந்திரா சந்திரஹாசன் திரைத்துறையில் மிகவும் பிரபலமான தயாரிப்பாளராக இருந்தவர்.
முதலில் சின்னத்திரை மூலம் தன்னுடைய பயணத்தை தொடங்கிய அனுஹாசன் 2000ம் ஆண்டு ஒளிபரப்பான ' அன்புள்ள ஸ்நேகிதியே' மூலம் அடியெடுத்து வைத்தார். அதை தொடர்ந்து ஒரு சில தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள தொடர்களில் நடித்து வந்த அனுவுக்கு தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது 'காஃபி வித் அனு'.
1995ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'இந்திரா' திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகமானார். அவரின் ஒட்டுமொத்த குடும்பமே சினிமா பின்னணியில் இருப்பவர்கள் என்றாலும் பெரிய அளவில் அனு ஹசானுக்கு சினிமா மீது ஈர்ப்பு இல்லை. இருப்பினும் மக்கள் மறந்துவிட கூடாது என்பதற்காக அவ்வப்போது ஏதாவது ஒரு சில படங்களில் தோன்றுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
நல்ல கேரக்டர், நல்ல படக்குழு அமைந்தால் மட்டுமே நடித்து வந்த அனு ஹாசன் இறுதியாக 2020ம் ஆண்டு தமிழில் வெளியான 'புத்தம் புது காலை' படத்தில் நடித்திருந்தார். 2023ம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'பபுள்கம்' படத்தில் நடித்திருந்தார். பேட்டி கொடுப்பது, சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது என எதிலுமே அவரை அடிக்கடி பார்த்துவிட முடியாது. இருப்பினும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவான ஒரு பர்சனாலிட்டியாக இருந்து வருகிறார்.